திமுக - அ.பு.பூர்ணிமா | பாமக - கே.என்.சேகர் | தவெக - ஜி.பாலமுருகன் |நாதக - தெ.க.சிலம்பரசன்
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-ம் ஆண்டு வில்லிவாக்கத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது அம்பத்தூர் தொகுதி. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகர்ப்புற கட்டமைப்புகள் அடங்கிய இத்தொகுதி, தொழிற்துறையாலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாலும் வேகமாக வளர்ச்சியடைந்து, பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற்பேட்டை, சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. அம்பத்தூர் தொகுதியில் கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வேதாச்சலம் 99,330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.ரங்கநாதன் 76,613 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.அலெக்சாண்டர், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன்மவுலானாவை 17,498 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஜோசப் சாமுவேல் 42,146 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து, அதிமுக வேட்பாளர் வீ.அலெக்சாண்டரின் வசமிருந்த அம்பத்தூர் தொகுதியை தன்வசப்படுத்தினார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்: தொழில்துறையில் உச்சத்தில் இருந்தாலும், அடிப்படைத் தேவைகளில் அம்பத்தூர் தொகுதி இன்னும் பின்தங்கியே இருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக, விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்கு கீழ்ப்பாக்கம் அல்லது ஸ்டான்லி மருத்துவமனைகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இத்தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதேபோல், அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆண்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி வேண்டும், கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நன்னீர் ஏரியாக மாற்ற வேண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலை, ரயில்வே பாலங்களை விரிவுபடுத்துதல், சேதமடைந்த சாலைகளை சரி செய்தல் போன்றவை தொகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.
வேட்பாளர்கள் பின்புலம்:
இந்த தேர்தலில் திமுக சார்பில் அ.பு.பூர்ணிமா என்ற புதிய முகத்தை அக்கட்சி களம் இறக்கியுள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கே.என்.சேகர் போட்டியிடுகிறார். தனது பழைய கோட்டையை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இவ்விரு பெரிய கட்சிகளுக்கு இணையாக, கடந்த தேர்தலில் மூன்றாம் இடம்பிடித்த நாம் தமிழர் கட்சியின் தெ.க.சிலம்பரசனும், முதன்முறையாகத் தேர்தல் களத்தை காணும் விஜய்யின் தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகனும் இளைஞர் பட்டாளத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வன்னியர், ஆதித் தமிழர் சமூக மக்களின் வாக்குகளே இங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. பலமுனைப் போட்டி நிலவுவதால், இம்முறை அம்பத்தூர் தொகுதியின் வாக்குகள் பலவாறாக பிரியக்கூடும். வெற்றி வித்தியாசமும் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால் அம்பத்தூர் தொகுதியை ஆட்கொள்ளும் கட்சி எது என்பதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.