புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவர் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கருத்து தெரிவித்திருப்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு ஏப்ரல் 7 அன்று, மருதம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டனுக்குச் சொந்தமான பனைமரங்களிலிருந்து கள் இறக்கப்படுகிறதா எனச் சோதனையில் ஈடுபட்டது. பனைமரங்களில் ஏறி, அதில் கட்டப்பட்ட பானைகளைக் காட்டும்படி மணிகண்டன் பணிக்கப்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் ஆலங்குளம் எஸ்ஐ இசக்கிராஜா, மணிகண்டனைக் கால்களில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்துக் காவல் துறை வழக்குப் பதிவு செய்ததையடுத்து மணிகண்டன் தரப்பு, ‘உள்ளூர்க் காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. சிபிஐ அல்லது வேறு அமைப்பு விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தது. அண்மையில் நடைபெற்ற விசாரணையில், ‘மூன்று காவலர்களால் ஒருவரைப் பிடிக்க முடியவில்லையா? தனி நபராக இருந்த விவசாயியை நோக்கி நான்கு முறை சுட வேண்டிய அவசியம் என்ன?’ என்கிற நீதிபதியின் கேள்விகள், காவல் துறையினரில் சிலர் வெளிப்படுத்தும் யதேச்சதிகாரத்தைத் தோலுரிக்கக்கூடியவை.
தமிழகத்தில் பனை ஏறும் தொழிலில் ஒரு லட்சம் பேர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. கிராமப்புறப் பண்பாட்டில் கள் தவிர்க்க முடியாத இடத்தை வகித்தாலும், கள் இறக்கவும் விற்கவும் 1948-இல் தடை விதிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டிலும் 1981ஆம் ஆண்டிலும் அரசே கள்ளுக்கடைகளைத் திறந்தாலும், பனை ஏறுவோர் விற்க அனுமதிக்கப்படவில்லை.
தடையைக் காரணம் காட்டி அவர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தப்படுவதுதான் கள நிலவரம். கள்ளுக்கான தடை விலக்கம் குறித்து 2025இல் தமிழகச் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதுகுறித்து அரசு எதிர்காலத்தில் பரிசீலிக்கும் எனப் பதில் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முதன்முதலாகத் தடையை விலக்கும் வகையில் நீதிமன்றம் சில கருத்துகளை வெளியிட்டுள்ளது. கள்ளின் பயன்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டிருக்கும் நீதிபதி புகழேந்தி, ‘கள்ளுக்குத் தடை விதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துகிறது. புதுச்சேரி, கேரளம் போலத் தமிழகத்திலும் கள் விற்க அனுமதிக்கலாம். இதனால் பல விவசாயிகள் பயன் அடைவர்’ என அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரு விவசாயி வீட்டில் கள்ளை ருசி பார்த்தது, இவ்விஷயம் மீதான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் குரல்களுக்கு வலுவூட்டுகிறது. சில நாள்களுக்கு முன் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு நீதிமன்றம் மாற்றியுள்ளது. கள்ளுக்கான தடையைப் பயன்படுத்தி, பதநீர் விற்பவர்களைக் கூடத் துன்புறுத்தச் சில காவல் துறை அதிகாரிகள் தயங்குவதில்லை. அவர்கள் தவறை உணரும் வகையில் சிபிசிஐடி விசாரணையின் முடிவு இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மீண்டும் ஒரு விவசாயி காரணமே இல்லாமல் காவல் துறையால் துன்புறுத்தப்படவோ, அவரது கருவிகள் சேதப்படுத்தப்படவோ கூடாது. மது விலக்குச் சட்டத்தில் கள்ளுக்கு நீடிக்கும் தடையை அகற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம். 48 சதவீதம் ஆல்கஹால் உள்ள மதுபானங்கள் விற்கப்படும் டாஸ்மாக் கடைகளை மூடிவரும் தமிழக அரசு, ஏறக்குறைய 4 சதவீதம் ஆல்கஹால் மட்டுமே உள்ள கள்ளுக்கு அனுமதி வழங்கி ஒரு மாற்றை முன்வைக்கலாம் என்கிற கள் ஆதரவு இயக்கங்களின் யோசனைக்குச் செவிசாய்க்க வேண்டும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.