அரசியல்

எந்தெந்த தொகுதிகள்? - தமிழக காங்கிரஸில் புது பஞ்சாயத்து!

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்த விவகாரத்தில், சத்தியமூர்த்தி பவனில் புதிய பஞ்சாயத்து ஒன்று வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இது குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறும்போது, “திமுக கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. இதில் கிரிஷ் சோடங்கருக்கு துளியும் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் கிரிஷ் - செல்வப்பெருந்தகை இடையே மோதலும் வெடித்தது. இத்தகைய சூழலில்தான், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள், “திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளை நமக்குத் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது, அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்தனர். ஆனால் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான பீட்டர் அல்போன்ஸோ, “திமுக எடுத்த சர்வேயில் சில சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்குச் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே திமுக கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதுதான் வெற்றிக்குக் கைகொடுக்கும்” என்றார். இது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

          

மேலும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் தொகுதிகளின் பட்டியலைத் தனியாக வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலை முன்வைத்து கிரிஷ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையில் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் வெடித்திருக்கும் நிலையில், அங்கு தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் கிரிஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்தச் சூழலைச் சாதகமாக்கி செல்வப்பெருந்தகை, திமுகவின் சர்வே முடிவுகளுக்குச் சாதகமாக இருக்கும் தொகுதிகளை வாங்கிவிடுவார் என ஒரு தரப்பினர் அஞ்சுகின்றனர். எனவே, “காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் கிரிஷ் சோடங்கர்தான் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என, டெல்லி தலைமைக்கு அவர்கள் அவசரக் கோரிக்கை வைத்துள்ளனர். இது சத்தியமூர்த்தி பவனில் புதிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்தது.

SCROLL FOR NEXT