ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக்கோடு வரை செல்லுமா என்பதை பற்றியெல்லாம் யோசிக்க தேவையில்லை. ஆனால், இவர்களின் கூட்டணி நிச்சயமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் கணிசமான பாதிப்பை உருவாக்கும். ஏனென்றால், பாமக கட்சி ரீதியாகவும், அமைப்பு, நிர்வாக ரீதியாகவும் அன்புமணியின் வசம் இருந்தாலும், வன்னியர் சமூகத்தின் அடையாளமாக ராமதாஸ்தான் உள்ளார். எனவே வட மாவட்டங்களில் உள்ள சுமார் 100 தொகுதிகளில் ராமதாஸுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது.
அதேபோல, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகம் அடர்த்தியாக உள்ள சுமார் 60 முதல் 80 தொகுதிகளில் சசிகலாவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதுமட்டுமின்றி இவர்கள் தங்கள் கூட்டணியில் அந்தந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு சிறிய கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளனர். எனவே, இவர்கள் நிச்சயமாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர்.
வெற்றி பெறுவதெல்லாம் முக்கியமில்லை, தொகுதிக்கு 2000 முதல் 10,000 வாக்குகள் வரை பிரிப்பதே தங்களின் நோக்கம் என்று உறுதியாக உள்ளனர் சசிகலாவும், ராமதாஸும். இவர்களின் திட்டப்படி, நிச்சயமாக சுமார் 50 தொகுதிகளிலாவது 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் இந்தக் கூட்டணி பெறும். அந்த வாக்குகள் அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு பாதகம் உருவாகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ராமதாஸின் இப்போதைய ஒரே நோக்கமாக அன்புமணியை வீழ்த்துவது உள்ளது. அதேபோல, சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரனை வீழ்த்தும் இலக்கு உள்ளது. எனவே, தங்களால் முடிந்தவரை என்டிஏ கூட்டணிக்கு அவர்கள் ‘டேமேஜை’ உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ராமதாஸ் தரப்பில் அவர்கள் வலுவாக உள்ள மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், சசிகலா கட்சியில் இன்னும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி வாரியான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இருப்பினும், இவர்களால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது சாத்தியம் தான். ஏனெனில், இந்த முறை தனது பலத்தை காட்ட எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்ய சசிகலா தயாராக உள்ளார். இதனால், வட மற்றும் தென் மாவட்டங்களில் இம்முறை தேர்தல் களம் அனல் பறக்கும்.
நான்கு முனைப் போட்டி என்பதால் பல தொகுதிகளில் வெற்றி என்பது சில ஆயிரம் வாக்குகளில் கூட தீர்மானிக்கப்படலாம். இதனால், ஐந்தாவது முனையாக களத்தில் குதித்துள்ள ராமதாஸ் - சசிகலா கூட்டணி நிச்சயமாக வட, தென் மண்டலத்தில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய அணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.