அரசியல்

கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

இ.ஜெகநாதன்

நான்குமுனை போட்டி கடுமையாக இருப்பதால் கணிக்க முடியாத தொகுதியாக காரைக்குடி மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.

காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் மருத்துவர் பிரபு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தல்களில் வெளிமாவட்டங்களில் களமிறங்கிய சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

          

சீமான்

ஓராண்டுக்கு முன்பே சீமான் போட்டியிடப் போகிறார் என்று கூறி அக்கட்சியினர் முன்கூட்டியே களமிறங்கி தேர்தல் பணியை தொடங்கினர். சின்னத்தையும் பட்டி

தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்து, பிரச்சாரத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி விட்டனர்.

கடந்த முறை இங்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரைமாணிக்கம் 23,872 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்தமுறை சீமானே போட்டியிடுவதால் தங்களுக்கே வெற்றிவாய்ப்பு என்று அக்கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், அவருக்கு கூட்டணி பலம் இல்லாதது, இலவச திட்டங்களுக்கு எதிரான கருத்து போன்றவை மக்களிடம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிராகவே உள்ளது.

மாங்குடி

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் தங்களின் முகமாக இறக்கியுள்ளனர். இத்தொகுதியை பெற திமுக கடும் முயற்சி செய்தபோதும், இருவரும் தங்களுக்காகவே கேட்டுப் பெற்றனர்.

காரைக்குடியை காங்கிரஸ் தக்க வைப்பது அவர்களது கவுரவ பிரச்சினையாகவே பார்க்கின்றனர். இதனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் மாங்குடி கடந்த 5 ஆண்டுகளில், காரைக்குடியை சுற்றிலும் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி, மினி விளையாட்டரங்கு, டைடல் பூங்கா உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.

இது அவரது பலமாக கூறப்படுகிறது. சீட் கிடைக்காததால் திமுகவினர் அதிருப்தி, தேவகோட்டை பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை தவிர பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வராதது, காங்கிரஸ் எதிரணியினரின் உள்ளடி வேலைகள் போன்றவை மாங்குடிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

தேர்போகி பாண்டி

அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி கடந்த முறை தனித்து நின்று 44,864 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும், இந்த முறை அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இருப்பது தங்களுக்கு பலம் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

மேலும் கடந்த முறை இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 54,365 வாக்குகள் பெற்றார். இந்த இருவரது வாக்குகளையும் சேர்த்தால், மாங்குடி பெற்ற 75,954 வாக்குகளை விட 23,275 கூடுதலாக இருக்கிறது.

இதனால் தங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்புள்ளதாக அமமுகவினர் கூறுகின்றனர். எனினும், கடந்த முறை அதிமுக எதிர்த்து நின்றதால், அனுதாபத்தில் அதிக வாக்குகள் கிடைத்ததாகவும், அந்த வாக்குகள் இந்த முறை கிடைக்காது என்று எதிர்தரப்பினர் கூறுகின்றனர்.

பிரபு

தவெக வேட்பாளர் பிரபு, காரைக்குடியில் மருத்துவராக உள்ளார். மேலும் ஓராண்டுக்கு முன்பே போட்டியிடப் போவதாக கூறி கிராமங்கள்தோறும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

இவரது தாத்தா சுதந்திர போராட்ட தியாகி, இவரது தாயார் தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இதுதவிர தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் போன்றவை அவருக்கு பலமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆனால் விஜய்க்கு கூட்டம் கூடினாலும், அது வாக்குகளாக மாறாது என எதிர்தரப்பினர் வைக்கும் வாதமாக உள்ளது. காரைக்குடி தொகுதியில் நான்குமுனை போட்டி கடுமையாக உள்ளதால், கணிக்க முடியாத தொகுதியாகவே உள்ளது.

SCROLL FOR NEXT