சென்னையில் நடைபெற்ற திமுக-வின் அறிவுத் திருவிழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “கருணாநிதி, ஸ்டாலினைவிட உதயநிதி தற்போது சிறப்பாகச் செயல்படுகிறார். கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது” என்றார்.
துரைமுருகன் மாத்திரமல்ல... அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் சொல்லாலும் செயலாலும் உதயநிதியை உயர்த்திப் பிடித்து வருகிறார்கள். கருணாநிதி, ஸ்டாலின் அரசியலைப் பார்த்த இவர்கள் உதயநிதிக்கும் பக்க பலமாக இருப்போம் எனச் சொல்லி வருகிறார்கள். திமுக-வுக்குள் நடக்கும் இந்த மாற்றத்தை அதன் கூட்டணிக் கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கும் இதுதான் எதிர்காலம் என்று தெரியும்.
கூட்டணிக் கட்சி தலைவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது விருப்பத்தை தயங்காமல் சொல்லியும் இருக்கிறார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக நடத்திய உதயநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், “இருளுக்குப் பின் விடியல் வரும்; உதயம் வரும்... உதயநிதியும் வருவார். அப்போது பாராட்டு விழா இன்னும் பெரிதாக இருக்கும்” என்று திமுக வென்றால் உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வர் என்ற தொனியில் பேசினார். அவரை இப்படிப் பேசவைப்பதற்காகவே அந்தக் கூட்டத்துக்கு அழைத்தார்களோ என்னவோ.
திமுக-வுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் தெரியும் திமுக-வின் அடுத்த தலைவரும் முதல்வர் வேட்பாளரும் உதயநிதி ஸ்டாலின் தான் என்று. மகன் உதயநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் அதை கட்சியினர் மூலமாகவே இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்ல வைத்திருக்கிறார் என்றே தெரிகிறது.