பட்டாபிஷேகத்துக்கு தயாராகும் உதயநிதி - பகிரங்கமாக சொன்ன திமுக..!

பட்டாபிஷேகத்துக்கு தயாராகும் உதயநிதி - பகிரங்கமாக சொன்ன திமுக..!
Updated on
2 min read

இளைய அரசருக்கு முடிசூட்டு விழா நடத்திக் கொண்டிருப்பதாக உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்வைத்து தமிழிசை போன்றவர்கள் திமுக-வினரை ’வாழ்த்திக்’ கொண்டிருக்கிறார்கள். ஆனால், உதயநிதி பிறந்த நாளை, ‘திமுக-வில் இனி எல்லாமே அவர் தான்’ என்று கட்சியினருக்கு கட்டியம்கூறும் விழாவாகவே மாற்றிவிட்டது திமுக தலைமை.

உதயநிதியின் பிறந்த நாளுக்காக பத்திரிகைகளில் மட்டுமல்லாது காட்சி ஊடகங்களிலும் கட்சியினர் கலக்கலாய் வாழ்த்து விளம்பரங்களைக் கொடுத்து அறிவாலயத்தின் பட்டத்து இளவரசரை திக்குமுக்காட வைத்தனர். அதில் பெரும்பகுதியான விளம்பரங்களில், ‘திமுகவின் எதிர்காலமே’ என்ற வாசகங்கள் எடுப்பாக மின்னின.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உதயநிதியை அடுத்த கட்டத்துக்குப் புரமோட் செய்வதற்கான வேலைகள் கட்சிக்குள் யாரையும் உறுத்தாத வகையில் முன்னெடுக்கப்பட்டன. அப்படித் தான் துணை முதல்வர் ஸ்தானம் வரைக்கும் கொண்டுவரப்பட்டார் உதயநிதி.

கட்சியைப் பொறுத்தவரை, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் அதிகாரம் உதயநிதிக்கு தரப்பட்டது. கட்சியின் துணை அமைப்புகளிலும் அவருக்கு விசுவாசமானவர்களுக்கு கணிசமான இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.

அடுத்ததாக, 2026 சட்டபேரவைத் தேர்தலிலும் உதயநிதிக்கு ‘ஏற்ற’ நபர்கள் கணிசமான இடங்களில் போட்டியிடுவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், தேர்தலுக்குப் பிறகு கட்சியையும் அதிகாரத்தையும் முழுமையாக உதயநிதி வசம் ஒப்படைக்கும் திட்டங்கள் இப்போதே தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற திமுக-வின் அறிவுத் திருவிழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “கருணாநிதி, ஸ்டாலினைவிட உதயநிதி தற்போது சிறப்பாகச் செயல்படுகிறார். கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது” என்றார்.

முத்தாய்ப்பாக, “உதயநிதி ஓர் நாள் ராஜேந்திர சோழனாக மாறுவார்” என்று அவர் புகழ்ந்ததும் கவனிக்கத் தக்கது. ராஜராஜ சோழன் சோழ மண்டலத்தைத் தான் ஆட்சி செய்தார். ஆனால், அவரது புதல்வரான ராஜேந்திர சோழன், வடக்கிலும் சென்று வாகையுடன் திரும்பினார் என்பது தான் வரலாறு. துரைமுருகன் எதற்காக உதயநிதியை ராஜேந்திர சோழனுடன் ஒப்பிட்டார் என்பது இப்போது புரிந்திருக்கும்.

பட்டாபிஷேகத்துக்கு தயாராகும் உதயநிதி - பகிரங்கமாக சொன்ன திமுக..!
“சங்கிகள் ஊடுருவலை தடுக்கும் ஆற்றல் எங்கள் தலைவருக்கு உண்டு!” - விசிக ரவிக்குமார் விறுவிறு நேர்காணல்

துரைமுருகன் மாத்திரமல்ல... அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் சொல்லாலும் செயலாலும் உதயநிதியை உயர்த்திப் பிடித்து வருகிறார்கள். கருணாநிதி, ஸ்டாலின் அரசியலைப் பார்த்த இவர்கள் உதயநிதிக்கும் பக்க பலமாக இருப்போம் எனச் சொல்லி வருகிறார்கள். திமுக-வுக்குள் நடக்கும் இந்த மாற்றத்தை அதன் கூட்டணிக் கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கும் இதுதான் எதிர்காலம் என்று தெரியும்.

கூட்டணிக் கட்சி தலைவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது விருப்பத்தை தயங்காமல் சொல்லியும் இருக்கிறார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக நடத்திய உதயநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், “இருளுக்குப் பின் விடியல் வரும்; உதயம் வரும்... உதயநிதியும் வருவார். அப்போது பாராட்டு விழா இன்னும் பெரிதாக இருக்கும்” என்று திமுக வென்றால் உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வர் என்ற தொனியில் பேசினார். அவரை இப்படிப் பேசவைப்பதற்காகவே அந்தக் கூட்டத்துக்கு அழைத்தார்களோ என்னவோ.

திமுக-வுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் தெரியும் திமுக-வின் அடுத்த தலைவரும் முதல்வர் வேட்பாளரும் உதயநிதி ஸ்டாலின் தான் என்று. மகன் உதயநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் அதை கட்சியினர் மூலமாகவே இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்ல வைத்திருக்கிறார் என்றே தெரிகிறது.

பட்டாபிஷேகத்துக்கு தயாராகும் உதயநிதி - பகிரங்கமாக சொன்ன திமுக..!
“அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது..!” - ராமதாஸ் ஆவேச பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in