இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாடு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிறகு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி உருவாகும் நிலை தற்போது காணப்படுகிறது. ஆளும் கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே இணைந்துள்ளது. இருப்பினும், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து பங்கேற்காததால், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் பங்கேற்கவில்லையோ என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால், இந்தக் கூட்டத்துக்கு கலந்துகொள்ள வந்தபோது, விழா மேடைக்கு 800 மீட்டர் தொலைவிலேயே அவர்களின் காரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், பங்கேற்காமல் திரும்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கையை ஐஜேகே தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில்,கட்சியின் மாநில மாநாடு கடலூரில் உள்ள வேப்பூரில் பிப்ரவரி 8-ல் நடைபெறுகிறது.
இது குறித்து, ஐஜேகே நிர்வாகிகள் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். “மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வந்து எங்கள் தலைவர்களை சந்தித்து பேசியபோது, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே இணைவது உறுதி செய்யப்பட்டது. கட்சியின் நிறுவனர் 2014-ல் பாஜக கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுபோல, 2024-ல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் என்ற அடிப்படையில் ஒதுக்க கேட்கிறோம்.
தொகுதிகள் ஒதுக்கீட்டை பாஜக அல்லது அதிமுக வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. திருக்கோவிலூர், விருத்தாசலம், குன்னம், லால்குடி ஆகிய தொகுதிகள் ஐஜேகேவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் என்பதால், கவனம் செலுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பூத் கமிட்டி அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
திருக்கோவிலூரில் பூத் கமிட்டு அமைத்துவிட்டோம். விருத்தாசலத்தில் பொறுப்பாளர்கள் நியமித்து இருக்கிறோம். அங்கு பூத் கமிட்டி அமைக்க தெரிவித்துள்ளோம். இதற்கிடையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 8-ல் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம். இந்த மாநாட்டுக்குபிறகு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கும்” என்று ஐஜேகே நிர்வாகிகள் கூறினர்.