தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் 30-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், கடைசி நேர அவசரத்தை தவிர்க்கும் விதமாக, தொகுதிப் பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய வேண்டும் என்று பழனிசாமியிடம் பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தமிழகம் வந்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதாக இருந்தது.
பியூஷ் கோயல், ஏற்கெனவே இருமுறை சென்னைக்கு வந்து பழனிசாமியுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். இருப்பினும், பாஜக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதிமுக ஒதுக்க முன்வந்த இடங்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. குறிப்பாக, பாஜக தரப்பில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டன. தனது கூட்டணி கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில் பாஜக கூடுதல் இடங்களை வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைக் குறிவைத்து பாஜக களம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருவதாக கூறப்பட்டது. அவர் பழனிசாமியுடன் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பியூஷ் கோயலின் தமிழக பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வியாழக்கிழமை காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இரவு அமித் ஷாவை சந்தித்து, தொகுதிப் பங்கீடு தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாஜக 30 தொகுதிகள் கேட்ட நிலையில், 25 தொகுதிகளை ஒதுக்குவதாக பழனிசாமி தெரிவித்தததாக கூறப்படுகிறது. அதேபோல, 30 கேட்ட பாமகவுக்கு 22 தொகுதிகள், 10 கேட்ட அமமுகவுக்கு 6 தொகுதிகள், 12 கேட்ட தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், தீவிர ஆலோசனைக்குப் பிறகு, தொகுதிப் பங்கீட்டை அமித் ஷா, பழனிசாமி இருவரும் சுமுகமாக இறுதி செய்ததாக தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசி, ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் அமித் ஷா உடனான சந்திப்பின்போது, திமுக அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது குறித்து பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறித்து பழனிசாமியிடம் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே, கூடுதல் தொகுதிகள் கேட்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.