அரசியல்

‘கைடன்ஸ் தமிழ்நாடு’ ஊழியர்கள் ராஜினாமா சர்ச்சை | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தமிழக தொழில் துறையின்கீழ் செயல்படும் Guidance Tamil Nadu எனப்படும் வழிகாட்டி நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களை அணுகுவது, முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழிகாட்டி நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 15 பேரை பணியில் இருந்து விலக வலியுறுத்தியதாகத் தெரிகிறது. முந்தைய ஆட்சிகளில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் இந்த நடவடிக்கையை தொழில் துறை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 15 பேரும் கடந்த ஜூலை மாதமே பணியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் சமீபகாலமாக ஆந்திர மாநிலத்துக்கு செல்வதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், அதற்கு தவெக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், தமிழக வழிகாட்டி நிறுவனத்தில் இருந்து பதவி விலகியவர்களில் கிறிஸ்டோ லாரல், பிரபாகரன், ப்ரீஜா பிரசாத் ஆகிய உள்பட 4 பேர் ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு குழுமத்தில் சமீபத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மூலமாகவே ஆந்திராவுக்கு நமது தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. இது குறித்து தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘எங்கள் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது இயல்பான நிகழ்வாகும். சிறந்த வேலைவாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம், சொந்த மற்றும் குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வழிகாட்டி நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்கள் வெளியேறுகின்றனர். ஊழியர்கள் தங்களது தொழில்முறை வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு வேறு வாய்ப்புகளைத் தேர்வு செய்வதை நாங்கள் மதித்து வருகிறோம்.

முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழகம் எப்போதும் ஆரோக்கியமான போட்டியை மேற்கொண்டு வருகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. மேலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீட்டு இடமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது’ என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, “தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திர மாநிலத்துக்குச் செல்வதற்குத் தொழில்துறை அமைச்சரின் கையாலாகாத்தனம்தான் காரணம். எனவே, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்துக்கும், ஆந்திராவின் இன்றைய ஆளும் கட்சிக்குத் தேர்தல் வேலை பார்த்து விட்டு வந்து, தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா என்ற கேள்விக்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

“தமிழகத்துக்கு வரவேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூபாய் 1,614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றன. என்ஃபீல்டு, ஹயர் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளைச் செய்ய தீர்மானித்துள்ளன. துரோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை செய்திகள் குறித்து அரசு அமைதி காக்கக் கூடாது. தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

“முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்க தவறிய தவெக அரசு, தனது நிர்வாக தோல்விக்கு வழிகாட்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயல்கிறதா? தொழில்துறை அமைச்சர் கடந்த காலங்களில் ஆந்திர மாநில முதல்வருக்காகத் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுவதும் சந்தேகங்களை எழுப்புகிறதே? இந்த சர்ச்சையின் உண்மைத்தன்மை குறித்து முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT