

போலீஸ் காவல் முடிந்து நிஷாந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் போலீஸார். (உள்படம்: மீனாட்சி)
படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ‘தனிஷ்க்’ நகைக் கடையில் 11.384 கிலோ நகை கொள்ளையில் முக்கியக் குற்றவாளியான நேரு நகர் அருட்பெருஞ்ஜோதி நகரைச் சேர்ந்த சுரேஷ் மகனும் யூடியூபருமான நிஷாந்த் (24) கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, இந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக தந்தை சுரேஷ், நிஷாந்த்தின் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், எனக்கும் இந்தக் கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை என மீனாட்சி கூறினார். ஆனால், நிஷாந்த் நகைகளை மறைத்து வைத்த இடங்களில் மீனாட்சியை அழைத்து சென்றுதான் போலீஸார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிஷாந்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இதையடுத்து நிஷாந்தை நேற்று முன்தினம் மாலை காவலில் எடுத்த போலீஸார் சேலத்துக்கு அழைத்துச் சென்று கொள்ளைக்குப் பிறகு மதுரையிலிருந்து சேலம் சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சேலத்தில் நிஷாந்துக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர்கள் 3 பேரை பற்றி விசாரித்து, ஆம்னி பேருந்தில் ஏற்றிவிட்ட அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்துள்ளனர்.
அவர்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். நிஷாந்தை சேலத்தில் இருந்து மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்து கொள்ளை நடந்த நகைக் கடை, நிஷாந்தின் வீடு, நகைகளை புதைத்து வைத்த மாடக்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
நகைக்கடைக்குள் அவர் இரும்பு சாரம் வழியாக உள்ளே புகுந்தது எப்படி, கடைக்குள் சென்று கேமராவில் உருவம் தெரியாமல் இருக்க ஸ்பிரே அடித்து கேமரா காட்சியை தடுத்து, நகைகளை எடுத்துக் கொண்டு வெளியேறியது, பின்னர் நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றியது, அங்கிருந்து மாடக்குளம் கண்மாய் அருகே மலையடிவாரத்தில் நகைகளை புதைத்து வைத்ததை போலீஸார் முன்பு நடித்துக் காட்டியுள்ளார்.
இதை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் ஆய்வாளர் சுபத்ரா ஆகியோர் விசாரித்தனர்.
நகைகளை புதைத்து வைக்க பயன்படுத்திய கடப்பாறை, ஸ்பிரே, கொள்ளைக்கு பயன்படுத்திய கையுறை, முகமூடி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதன்பின்பு நிஷாந்தை போலீஸார் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நேற்று மாலை நீதிபதி ராஜபிரபு முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது நிஷாந்திடம் நீதிபதி விசாரணையின்போது போலீஸார் துன்புறுத்தினார்களா? வேறு எதாவது சொல்ல வேண்டுமா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் போலீஸார் துன்புறுத்தவில்லை என்றார்.
போலீஸ் காவலில் செல்லும்போது மிகுந்த அச்சத்துடன் மன நெருக்கடியுடன் சென்ற நிஷாந்த் நேற்று சிரித்த முகத்துடனேயே நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார்.
நிஷாந்தை டிச.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
நிஷாந்த் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்த தாவது: கல்லூரியில் படித்து முடித்த பிறகு யூடியூப் சேனல்களுக்கான ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை துல்லியமாக எடிட்டிங் செய்யும் பணிகளை செய்தேன்.
என்னுடன் படித்த மீனாட்சி, ஒரு யூ டியூப் சேனலில் வேலை பார்த்தார். அவருக்கு வீடியோ எடுத்து கொடுத்தேன். அவர் கேட்டுக் கொண்டதால் அவரது தாயார் நடத்திய சேனலுக்கும் வீடியோ, எடிட்டிங் பணி செய்து கொடுத்தேன்.
இதன்மூலம் மீனாட்சியின் குடும்பத்துடன் நெருங்கி பழகினேன். சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட, தந்தையை நச்சரித்து கடன் பெற்று விலையுயர்ந்த செல்போன், மோட்டார் சைக்கிள் வாங்கி ஊர், ஊராக சுற்றினேன்.
கடன் தொல்லையால் பல இடங்களில் அவமானப்பட்டேன். என்னால் மட்டும் தந்தைக்கு ரூ.30 லட்சம் கடன் சுமை ஏற்பட்டது. இந்தக் கடனை அடைக்க எனது வருமானம் போதவில்லை.
தந்தை ஆட்டோ ஓட்டுவதால் கிடைத்த வருவாயும் போதவில்லை. தோழிக்கும் வீடு கட்டுவதால் பணத் தேவை இருந்தது. இதனாலேயே நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன்’’ என்று கூறினார்.
முதல்முறை கொள்ளை அடிக்க முடியாதது ஏன்?
நிஷாந்த் போலீஸாரிடம் மேலும் கூறுகையில், ‘‘எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் தனிஷ்க் கடை இருந்ததால் அங்கு கொள்ளையடிக்க முடிவு செய்து வீட்டுக்கு போகும் போதெல்லாம் நகைக் கடையை கண்காணித்தேன்.
நகைக் கடைக்கு நகை வாங்குவது போல் அடிக்கடி சென்று வந்தேன். அப்போது நகைக்கடை ஊழியர்களிடம் ஒவ்வொரு நகையை பற்றியும் விசாரித்தேன். ரேக்குகளில் இருக்கும் நகைகளை தொட்டால் அலாரம் அடிக்குமா என்பதை தெரிந்து கொண்டேன்.
அதன் பிறகு கடையில் கட்டுமானப் பணி நடப்பதால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புச் சாரம் வழியாகச் சென்று கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு கொள்ளையை நடத்தினேன். முதல்முறை லிப்ட்டை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
பின்னர் லிப்ட்டை எப்படி ஆன் செய்வது, இயக்குவது குறித்த தொழில்நுட்பத்தை யூடியூப் மூலம் முழுமையாக கற்றுக் கொண்ட பிறகு 2-வது முறை கடைக்குள் நுழைந்து கொள்ளை அடித்ததை மட்டும் தோழி மீனாட்சிக்கும், தந்தைக்கும் தெரிவித்துவிட்டு சேலத்துக்கு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றேன்.
3 இருசக்கர வாகனங்களை பயன்படுத்தினேன். ஒரு பை நகையை மட்டும் எங்கே வைத்தேன் என்பதை மீனாட்சிக்கு தெரிவித்தேன்.
நகைகளை துணியில் சுற்றி புதைத்தேன்
திருப்பரங்குன்றத்திற்கு நகைகளுடன் சென்று, அங்கிருந்தபடி அதிகாலை 4 மணியளவில் தந்தையை போனில் அழைத்தேன்.
விபத்தில் சிக்கிவிட்டதாகவும், பதற்றமாக இருப்பதாகவும் உடனே வருமாறும் கூறியதால் அவர் வந்தார். அவரிடம் நகை பையை கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்குமாறு கொடுத்து அனுப்பினேன்.
நான் நாகமலை புதுக்கோட்டைவரை சென்று அங்கு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பஞ்சராக்கினேன். அங்கிருந்து வீட்டுக்கு நவ.12-ம் தேதி காலை 9 மணிக்கு வந்து தந்தையிடம் கொடுத்த பையை வாங்கி நகைகளை 13 பாகங்களாக பிரித்து தனித்தனியாக துணியில் சுற்றி 2 பைகளில் வைத்தேன்.
இவற்றை ஆட்டோவில் சென்று மாடக்குளம் மலையடிவாரத்தில் புதைத்தேன். அப்போதுதான் துணிகளை எரித்ததை சிலர் பார்த்துவிட்டனர். பையில் நகை இருந்ததை தந்தை பார்த்தாரா என எனக்கு தெரியாது.
சுரேஷ்
மீனாட்சியையும், தந்தையையும் விட்டுவிடுங்கள் ‘ப்ளீஸ்’
பல இடங்களில் சுற்றியபடி பெங்களூர் சென்றேன். அங்கிருந்து சேலம் வந்து நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டேன். அவ்வாறு சரணடைந்திருந்தால், போலீஸாரிடம் மறைத்துவிட்டு ஒரு பையிலுள்ள நகையாவது மிஞ்சும் என கருதினேன்.
ஆனால் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அதற்குள் பஸ் டிரைவர் மூலம் சிக்கினேன். இவ்வளவு நகை கொள்ளையடித்தும் ஒரு கிராம் கூட எனக்கு கிடைக்கவில்லை. கொள்ளை அடித்த தகவல் மீனாட்சிக்கும், என் தந்தைக்கும் நான் சொன்ன பின்னரே தெரியும். அவர்களுக்கு இச்சம்பவத்தில் துளியும் சம்பந்தம் இல்லை.
ப்ளீஸ், அவர்களை விட்டு விடுங்கள், என நிஷாந்த் கூறினார். மீனாட்சிக்கு தொடர்பில்லை என்பதை திரும்பத் திரும்ப சொல்லியபடியே இருந்தார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போன் உரையாடல் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி, சரியான தகவல்களை பெற்றனர். நிஷாந்த் அளித்த வாக்குமூலம் அனைத்தும் உண்மையா என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.