அரசியல்

“தமிழக மக்களின் கேரக்டரை தேர்தலில் புரிந்து கொள்வீர்கள்” - திமுக, பாஜகவை சாடி விஜய் பேச்சு

எஸ்.விஜயகுமார்

ஈரோடு: “மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் கேரக்டரை புரிந்துகொள்வர்” என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற, மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தவெகவினர் பல ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில், அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது: “ஈரோட்டில் வந்து மஞ்சளைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், மஞ்சளை வைத்து தான் தொடங்குவார்கள். அந்த மஞ்சள் நிறம் தான் தவெக கொடியிலும் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் பாசன கால்வாயை உருவாக்கிய காலிங்கராயன், பல ஆண்டுகளுக்கு முன்னரே நதிநீர் இணைப்புக்கு வித்திட்டவர். அவர், விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து, பாசன திட்டத்தை நிறைவேற்றினார். அவர் காலிங்கராயன் கால்வாயை உருவாக்குவதற்கு, அவரது அம்மா தைரியம் கொடுத்தார். அம்மா கொடுக்கும் தைரியம் இருந்தால், எதையும் சாதிக்கலாம். இங்கு கூடியிருக்கும் அம்மா, அக்கா, தம்பி, தங்கை என எல்லோரும் கொடுக்கும் தைரியம் தான் என்னை சாதிக்க வைக்கிறது.

அப்படிப்பட்ட எங்களை, பிரிக்க அவதூறு பரப்பி, சூழ்ச்சி செய்கின்றனர். இது 10 வயதில் நான் சினிமாவுக்கு வந்தபோது ஏற்பட்ட உறவு, இதை யாராலும் பிரிக்க முடியாது. என்னை கைவிட மாட்டீங்க தானே, கூட நிற்பீர்கள் அல்லவா? நான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே, தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே இங்கு மக்களுக்காக பவானி ஆற்றின் மூலம் நீர்ப்பாசன திட்டத்தைக் கொண்டு வந்தவர் காலிங்கராயன். இன்று அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் 3 மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பயனடைவார்கள். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. வள்ளுவர் கோட்டத்தை அழகுபடுத்துவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முக்கியமில்லையா? கவர்மென்ட் நடத்துகிறார்களா? கண்காட்சி நடத்துகிறார்களா?

பெரியாரின் கொள்கைகள், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் அணுகுமுறை எங்களுடையது. இதை பயன்படுத்தக்கூடாது என்று எவரும் கம்ப்ளெயின்ட் செய்ய முடியாது. தவெக எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று கூறிவிட்டு, ஏன் தவெக பற்றி புலம்புகிறீர்கள். எங்களை பார்த்து பயம் இல்லை என்று சத்தமாக கூறுகிறீர்கள், ஆனால் மீடியா, ரேடியா ஆட்களை வைத்து பேசுகிறீர்கள், முதல்ல மண்டை மேல இருக்கிற கொண்டைய மறைங்க சார். உங்களுக்கு கொள்ளையடிச்ச காசு தான் துணை, எங்களுக்கு இந்த மாஸ் தான் துணை.

பெரியார் தன்னிடம் இருந்த செல்வாக்கை வைத்து காசு, பணம் சேர்க்கவில்லை, தன் குடும்பத்துக்கு பதவி கேட்கவில்லை. அப்படிப்பட்ட பெரியார் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்காதீங்க. எங்களுக்கு அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. இது உங்களுக்கு (தவெகவினருக்கு) புரிந்தால் போதும். எங்களுக்கு எதிரி யார் என்று தெரியும். அவர்களை மட்டுமே எதிர்ப்போம். ஆனால், களத்திலேயே இல்லாத, களத்துக்கு வராதவர்களை எதிர்க்கிற ஐடியாவே இல்ல பாஸ். எங்களுக்கு வேற வேலை இருக்கிறது.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. நீட் தேர்வு ரத்து செய்வோம், கல்விக்கடன் ரத்து செய்வோம், சிலிண்டருக்கு மானியம் கொடுப்போம் என கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று குறிப்பிட்டார்கள். அப்போது புரியவில்லை, இப்போது நன்றாக புரிகிறது. திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி.

உலகப் புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்காக, ஆராய்ச்சி மையம் அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கட்டிடம் மட்டுமே கட்டியிருக்கிறனர். மஞ்சளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவோ, மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்யவோ திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பவானி, நொய்யல், அமராவதி நதிகளை இணைப்போம் என்றார்கள், அதையும் செய்யவில்லை. ஆறுகளை தூய்மைப்படுத்த பல ஆயிரம் கோடி ஒதுக்குவோம் என்றார்கள், ஆனால், ஆற்று மணலை தான் கொள்ளை அடித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தின் வளமான செம்மண் கொள்ளையடிக்கப்படுகிறது. அரசுக்காக வேட்டி, சேலை நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு, 30 சதவீத கூலி, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

நான் காஞ்சிபுரத்தில் பேசியதை, திரித்து கூறுகின்றனர். எல்லோருக்கும் வீடு வேண்டும் என்றேன். உடனே, நாங்கள் ஏற்கெனவே வீடு கட்டி கொடுத்திருக்கிறோம் என்கின்றனர். நான் கேட்கிறேன், இங்கு வந்து இருப்பவர்கள் எத்தனை பேர் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள், உங்களுக்கு சொந்த வீடு இல்லை தானே. ஒவ்வொருவரும் டிகிரி படித்திருக்க வேண்டும் என்றால், எல்லோரும் உயர் கல்வி படிக்கிறார்கள் என்கின்றனர். ஆனால், பள்ளி இடை நிற்றல் அதிகமாக இருந்தது யாருடைய ஆட்சியில்.

அது மட்டுமா, மாணவர்கள் வருகை குறைவு என்று கூறி 207 பள்ளிகளை மூடியது யார். பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றீர்களே, ஒரு லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு தந்தீர்களா. சிறு, குறுந்தொழிற்சாலைகளை நசுக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள். மின்வெட்டு ஏற்படுவதாகக்கூறி, கமிஷனுக்காக அதிக விலை கொடுத்து, தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறீர்கள்.

நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிரானவர்கள் என்று பேசுகிறார்கள். மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கான சலுகைகளை வழங்குவதை எப்படி இலவசம் என்று கூறலாம் என்றுதான் கேட்டோம். மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதாகக் கூறும் நீங்கள், அவர்கள் வரிப்பணத்தில் கொடுப்பதைக் கூட, ஓசி என்று கொச்சைப்படுத்துகிறீர்கள். கேட்க ஆளில்லை என்று நினைத்தீர்களா, நான் இருக்கிறேன். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் வருவேன்.

முதல்வர் சார், என் கேரக்டரையே புரிந்துகொள்ளவில்லை என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். நான் பேசியது சினிமா டயலாக் என்று கூறிவிட்டு, நீங்கள் பேசியது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்த வரிகளா?

நீங்க தான் என்னுடைய கேரக்டரை புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய கேரக்டர் என்றால், அது தமிழ்நாட்டு மக்களுடைய கேரக்டர். மத்தியிலும்,

மாநிலத்திலும் இருப்பவர்கள் வரப்போகும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், தமிழ்நாட்டு மக்களோட கேரக்டரை புரிந்து கொள்வீர்கள்” என்று பேசினார்.

கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்குமார் உள்ளிட்டோரும் பேசினர்.

SCROLL FOR NEXT