திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுகவின் நீண்டகால தோழமை கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக கூட்டணியில் தலா 6 இடங்களில் போட்டியிட்டு, தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. அதேசமயம் 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுமே தாங்கள் போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடின. இதை முன்னிறுத்தி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் தலா 10 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இது தொகுதிப் பங்கீட்டில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கட்சிகளின் வருகையாலும், கடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றி சதவீதம் குறைவாக இருந்ததைக் சுட்டிக்காட்டியும், இந்த முறை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தலைமை நடத்திய மறைமுக பேச்சுவார்த்தையின்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் இடங்களை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது, எனவே 5 தொகுதிகளுக்கு உடன்படுங்கள்” என திமுக தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை, கம்யூனிஸ்ட் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுக-வுடன் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது உயர்நிலைக் குழுவை அறிவித்தது.
கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி மற்றும் கோ.பழனிசாமி ஆகியோர் அடங்கிய இக்குழு, வரும் பிப்ரவரி 27-ம் தேதி திமுக-வுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருக்கும் கம்யூனிஸ்ட்கள், தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவாக திமுக கொடுக்க முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.