ஜனவரி 9 அன்று கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பாசார் கிராமத்தில் தேமுதிக மாநாடு நடந்தது. பெருங்கூட்டம் கூடியது. மாநாட்டில், “7 மணிக்கே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என்று கட்சியின் பொருளாளர் சுதீஷ் உறுதியாக தெரிவித்த போதிலும், 8 மணி வரை மாநாட்டு மேடை குழப்பமாக காணப்பட்டது. 8 மணிக்கு வேனில் மாநாட்டுத் திடலை வலம் வந்த பிரேமலதா, வந்திருந்த பெரும் கூட்டத்தினரைப் பார்த்து முகமலர்ச்சியோடு இருப்பதை காண முடிந்தது.
அந்த பூரிப்போடு கூட்டணிக் குறித்து கூட்டத்தில் பேசும்போது, “தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பேசி, சத்ரியனாக இருந்தது போதும்; சாணக்கியத்தனமாக இருக்க வேண்டும் என்பதால், கூட்டணிக் குறித்து ஆண்ட, ஆளும் கட்சிகளே முடிவெடுக்காத நிலையில் நாம் மட்டும் ஏன் அவசரப்பட வேண்டும்? எனவே தெளிவாக சிந்தித்து, நம்மை மதிப்பவர்கள் யார் என்பதை அறிவிப்போம்” என்றதும் கூட்டத்தில் பெரும் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருந்தது.
அதேநேரத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் பேசிய போது, சில கருத்துகளைப் பகிர்ந்தன. “கடலூர் மாநாட்டில் கூடிய கூட்டம் சுமார் ஒரு லட்சத்தை தாண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் கூட்டணி அறிவிப்பை மேலும் தாமதப்படுத்தினால் நமக்கு ஆதாயம் என அண்ணியார் நினைக்கிறாங்க” என்றனர். மேலும், “90 சதவீதம் திமுகதான் என்ற சாய்ஸ் இருந்தது. இந்தக் கூட்டம் மனதை மாற்றியிருக்கலாம். கூட்டம் ஒரு லட்சத்தை தாண்டும் என நாங்கள் கூட கணிக்கவில்லை” என்ற உண்மை நிலவரத்தையும் வெளிப்படையாக கூறினர்.
“நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை” என்ற தேமுதிக தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை மறுத்துப் பேசினாலும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இரு பெரும் கட்சிகளுக்கு வலிக்காத வகையில், இருபுறமும் ‘சேஃப் கார்னரில்’ நிறைவேற்றப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி. தங்களுக்கு ‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளனர் பிரேமலதாவும், எல்.கே.சுதீஷும்.
எல்.கே.சுதீஷ் பேசும்போது, “கேப்டன் முதன்முறையாக போட்டியிட்டு வென்ற விருத்தாசலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு பிரேமலதா துணை முதல்வராக செல்வார்” என்று பேசியிருக்கிறார். இறுதியாக பேசிய பிரேமலதாவும், “தேமுதிவுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய மாவட்டம் கடலூர். கேப்டனை வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பியது விருத்தாசலம்தான்” என்று கூறி, “இங்கு மேடையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் அமைச்சருக்கு நிகரானவர்கள்” என்று அழுத்தமாய் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு கூட்டத்தில் உணர்வு ததும்பலுடன் கரவொலி எழும்பியது.
மொத்தத்தில் எந்தக் கூட்டணி அமைந்தாலும், ‘விருத்தாசலம் தொகுதி வேண்டும் ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்பதை பிரேமலதா, எல்.கே.சுதிஷ் இருவரும் முன்வைக்கின்றனர். “நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை” என மறுத்துப் பேசினாலும், இந்த மாநாடு அக்கா - தம்பியின் தேர்தல் பேரத்துக்கான நல்லதொரு சமிக்ஞையாக மாறியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். - ந.முருகவேல்