கரூர் + ஜனநாயகன் - விஜய்யை ‘வளைக்க’ பாஜக வியூகம்!

எந்த வழியிலாவது திமுக ஆட்சியை அகற்றியே ஆகவேண்டும் என சூளுரைத்திருக்கும் அமித் ஷா, அதற்கான வழிவகைகளை எல்லாம் ஆராய்ந்து கொண்டே இருக்கிறார். அதன் ஒரு முயற்சியாக, தவெகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதும் அவரது திட்டமாக இருக்கிறது.

திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் திருப்பத் திரும்பச் சொன்னாலும், “சும்மா இருங்க விஜய்... நீங்க எங்க பக்கம் வந்தா உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. பொது எதிரியை உறுதியா நின்னு எதிர்க்கலாம்; உதிரியா நின்னு தோற்றுவிட வேண்டாம்” என்று அவருக்கு புத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறது பாஜக.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போதே பாஜக-வும் அதிமுக-வும் போட்டி போட்டுக் கொண்டு தவெக-வுக்கு வக்காலத்து வாங்கின. அதிமுக கூட ‘இனி விஜய் நம் பக்கம் வரமாட்டார்’ என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டது. ஆனால், பாஜக இன்னமும் விஜய்க்காக காத்திருக்கிறது. இந்தக் காத்திருப்பின் பின்னணியில், பாஜக கூட்டணியின் வெற்றிக் கணக்கு மட்டுமல்லாது காங்கிரஸை அரக்கு மாளிகைக்கு அனுப்பும் ராஜ தந்திரமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

திமுக கூட்டணிக்குள் விஜய்யை வைத்து காங்கிரஸ் ஒரு கலகத்தை நடத்தி வருகிறது. இதனால் காங்கிரஸுக்கு திமுக இம்முறை எதிர்பார்க்கும் மரியாதையை அளிக்காது என்பது பாஜக-வின் கணிப்பு. எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் காங்கிரஸ் தவெக பக்கம் திரும்பும். அப்படி வந்தால் 70 தொகுதிகளும் அதிகாரத்தில் பங்கும் தர தவெக தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸை சாய்த்துக் கொண்டே வரும் பாஜக, தமிழகத்திலும் அதை சாத்தியமாக்க நினைக்கிறது. அதற்கு இடையூறாக, கூடுதல் சீட்களை தந்து காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரிக்க தவெக காரணமாகிவிடுமோ என்ற கவலையும் பாஜக-வுக்கு இருக்கவே செய்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே இரண்டு முக்கிய அஸ்திரங்களை கையில் எடுத்திருக்கிறது பாஜக. ஒன்று, கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை. இன்னொன்று, ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் விவகாரம்.

கரூர் விவகாரத்தில் மற்றவர்களை எல்லாம் விசாரணைக்காக கரூருக்கு அழைத்த சிபிஐ, விஜய்யை டெல்லிக்கே அழைத்திருக்கிறது. அவரை மட்டும் அழைத்தால் அரசியலாக்குவார்கள் என்பதால் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்களை முன்கூட்டியே டெல்லிக்கு அழைத்து 2 நாள் விசாரணை நடத்தியது சிபிஐ.

இந்த விசாரணையின் போக்கை வைத்து தவெக-வுக்கு எப்படி வேண்டுமானாலும் கடிவாளம் போடமுடியும். அதேசமயம், பாஜக-வின் யோசனையை விஜய் கேட்டால், விசாரணையை திமுக அரசுக்கு எதிராகவும் திருப்ப முடியும். இதுவரை ஸ்கிரிப்டை பார்த்துப் படித்தே பழகிவிட்ட விஜய், சிபிஐ விசாரணையை எப்படி எதிர்கொள்வார் என்பதிலும் சிக்கல் இருக்கிறது.

தங்களின் தொலைநோக்கு செயல்திட்டமான கரூர் வழக்குக்கு முன்னோட்டமாக ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தை வைத்து சின்னதாய் ஒரு அரசியல் ட்ரைலரை விஜய்க்கு பாஜக ஓட்டிக் காட்டி இருப்பதாகவே தெரிகிறது. “500 கோடி ரூபாய் முதலீடு” என பதறுகிறது படக்குழு. “நீங்கள் ரிலீஸ் தேதியை குறித்துவிட்டீர்கள் என்பதற்காக நாங்கள் அவசரப்பட முடியாது” என கூலாகச் சொல்கிறது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம். இதனிடையே, இந்த விவகாரத்தை 21-ம் தேதிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்துவிட்டது நீதிமன்றம்.

‘ஜனநாயகனை’ தியேட்டருக்கு கொண்டு வந்த பிறகுதான் அடுத்த கட்ட பிரச்சாரத்தை திட்டமிடுவது என்ற முடிவில் இருக்கும் விஜய்க்கு, தணிக்கை வாரியம் போட்டிருக்கும் இந்த முட்டுக்கட்டை எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எப்படியாவது ‘ஜனநாயகன்’ திரைக்கு வரத்தான் போகிறது என்றாலும், ‘இப்படியும் சிக்கல்களை உண்டாக்க முடியும்; பார்த்து நடந்து கொள்ளுங்கள்’ என்று விஜய்க்கு உணர்த்தி இருக்கிறது பாஜக.

இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டதால் தானோ என்னவோ, கிரிஷ் சோடங்கரே ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தடைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இதற்கே இப்படி என்றால், சிபிஐ வழக்கில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று விஜய் யோசிக்க ஆரம்பித்தால்... தமிழக தேர்தல் களம் தடம் மாறத் தொடங்கிவிடும். - கரு.முத்து

கரூர் + ஜனநாயகன் - விஜய்யை ‘வளைக்க’ பாஜக வியூகம்!
கல்விக் கடன் பெற எதெல்லாம் தடையே இல்லை? - ஒரு சட்ட வழிகாட்டுதல்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in