2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். மேலும், அவருக்கு ராஜ்ய சபா சீட்டும் கிடைத்துவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக அன்புமணியை எதிர்த்து பல்வேறு வழிகளில் கடுமையாகப் போராடிய ராமதாஸுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. இதனால் இந்தத் தேர்தலில் அவர் எந்தப் பக்கம் போவது என்று முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து ராமதாஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “அன்புமணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றதால் திமுக-வுடன் இணைந்து பதிலடி கொடுக்கத் திட்டமிட்டார் ராமதாஸ். மறுபக்கம், அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களை நிறுத்தி நெருக்கடி கொடுக்க திமுக-வும் தயாராகவே இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால்,“பாமக உள்ளே வந்தால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” என விசிக எதிர்ப்பு தெரிவித்ததால், பின்வாங்கிய ராமதாஸ், தவெக பக்கம் செல்ல முடிவெடுத்தார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை தைலாபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தவெக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், புதிதாக வந்த கட்சி என்பதால் ராமதாஸுக்கு அங்கு செல்ல முழுமையாக மனம் வரவில்லை. இதற்கிடையில், திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றுவிட்டது. தேமுதிக-வை தவறவிட்டிருக்கக் கூடாது என நினைக்கும் டெல்லி பாஜக தலைவர்கள் ராமதாஸ் ஒருவேளை தவெக பக்கம் சென்றுவிட்டால் அது தங்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சுகிறார்கள். அதனால், எப்படியாவது ராமதாஸை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு செல்ல நினைக்கிறார்கள்.
இதற்காக பியூஷ் கோயல் சமீபத்தில் ஸ்ரீகாந்தியுடன் பேசினார். ‘ஆயிரம் இருந்தாலும் அன்புமணி மூன்றாவது நபர் இல்லை. நாம் ஒன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். கூட்டணிக்கு வந்தால் உங்களுக்குத் தேவையானதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என பியூஷ் கோயல் உத்தரவாதம் அளித்ததாகத் தெரிகிறது. ஆனால், ‘என் உயிராக நினைத்த கட்சியை என்னிடமிருந்து அன்புமணி அபகரித்துவிட்டார். அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால், மாம்பழம் சின்னத்தில் எனது வேட்பாளர்களை நிறுத்த சம்மதிக்க வேண்டும். அதில், ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி, அருள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நிச்சயம் சீட் வேண்டும். இதற்கு சம்மதம் என்றால் மொத்தமாக எத்தனை சீட் வேண்டும் என சொல்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
தனது இந்த முடிவின் மூலம் மாம்பழம் சின்னத்தை தன்னிடமிருந்து பறித்த அன்புமணிக்கு செக் வைக்க நினைக்கிறார் ராமதாஸ். இந்தத் தகவல்களை பியூஷ் கோயல், அன்புமணிக்கு தெரிவித்திருக்கிறார். அவரும் ராமதாஸின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் அன்புமணி மீதான கோபத்தால் ராமதாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாத சஸ்பென்ஸாகவே இருக்கிறது” என்றனர்.