அரசியல்

விண்வெளியில் ஆயுதங்களை குவிக்கும் அமெரிக்கா!

செய்திப்பிரிவு

எ​திரி​களின் அச்​சுறுத்​தல்​களை முறியடிக்க விண்வெளியிலும் ஆயுதங்​களை நிலைநிறுத்தி உள்​ளோம் என்று அமெரிக்கா தெரி​வித்​துள்​ளது.

எதிர்​கால போர்​கள் விண்​வெளியை மைய​மாக கொண்டே நடைபெறும் என்று சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் எச்சரிக்கை விடுத்​துள்​ளனர். இதைக் கருத்​தில் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டில் அமெரிக்க விண்​வெளி படை தொடங்​கப்​பட்​டது. ரஷ்யா, சீனா, பிரான்​ஸ், பிரிட்​டன், இந்தியா உள்​ளிட்ட நாடு​களும் வெவ்வேறு பெயர்​களில் விண்​வெளி படைகளை தொடங்கி உள்ளன.

இந்த சூழலில் அமெரிக்க விமானப் படை செய​லா​ளர் டிராய் மெய்ங்க், மேரிலேண்ட் மாகாணம், நேஷனல் ஹார்பர் பகு​தி​யில் நேற்று முன்​தினம் பேசும்​போது, “விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் அதி​கரித்து வருகின்றன. எதிரி​களின் அச்சுறுத்தல்​களை முறியடிக்க அமெரிக்க விண்​வெளி படை சார்பில் விண்​வெளி​யில் ஆயுதங்​கள் நிலை நிறுத்​தப்​பட்டு உள்ளன” என்று தெரிவித்​தார்.

அமெரிக்க விண்​வெளி படை​யின் ஓய்வுபெற்ற கர்​னல் சார்​லஸ் கால்​பிரெத் கூறிய​தாவது: அமெரிக்கா் - ஈரா்ன் போரில் ஈரானுக்கு சீனா மறை​முக​மாக உதவி செய்து வருகிறது. அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் குறித்த செயற்​கைக்​கோள் படங்​கள், தகவல்​களை ஈரான் ராணுவத்​துக்கு சீனா வழங்கி வருகிறது. இதை முறியடிக்க எதிரி​களின் செயற்​கைக்​கோள்களை லேசர், ஜாமர் மூலம் செயலிழக்க செய்ய அமெரிக்க விண்​வெளிப் படை நடவடிக்கை எடுக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்.

சீனா, ரஷ்யா அதிருப்தி

சீன வெளி​யுறவுத் துறை செய்​தித்​தொடர்​பாளர் குவோ ஜியாகுன் கூறும்​போது, “விண்​வெளியை போர்க்​கள​மாக மாற்​றக்​கூ​டாது. அமெரிக்​கா​வின் நடவடிக்​கை​யால் விண்​வெளி​யில் ஆயுதங்​கள் குவிக்​கப்​படும் அபா​யம் உருவாகும்” என்று தெரி​வித்​தார். ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் கூறும்​போது, “விண்​வெளி​யில் எந்​தவொரு ஆயுத​மும் இருக்​கக்​கூ​டாது. இது தொடர்​பாக சர்​வ​தேச நாடு​களிடம் கருத்​தொற்றுமையை ஏற்​படுத்த ரஷ்யா தீவிர முயற்சி செய்து வருகிறது” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறியதாவது: பூமி​யில் இருந்து ஏவு​கணை​கள் மூலம் செயற்​கைக்​கோள்​களை தகர்க்​கும் சக்​தி​வாய்ந்த ஏவுகணை​கள் அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, இந்​தி​யா​விடம் உள்​ளன. கடந்த 2024-ம் ஆண்​டில் ரஷ்​யா​வின் சார்​பில் இரு செயற்​கைக்​கோள்​கள் விண்​வெளி​யில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயற்​கைக்​கோள்​கள், ஐரோப்​பிய செயற்​கைக்​கோள்​களின் தகவல் தொடர்புகளை முடக்​கின.

மேலும் சீன விஞ்​ஞானிகள், டிபிஜி 1000சிஎஸ் என்ற அதிநவீன மைக்​ரோவேவ் ஆயுதத்தை உரு​வாக்கி உள்ளனர். இதை செயற்​கைக்​கோளில் பொருத்தி விண்வெளி​யில் நிலைநிறுத்த முடி​யும். இதன்மூலம் விண்வெளி​யில் சுற்​றும் எதிரி​களின் செயற்கைக்கோள்களை அழிக்க முடி​யும். குறிப்​பாக அமெரிக்​கா​வின் ஸ்டார்​லிங்க் செயற்​கைக்​கோள்​களை முடக்க மைக்​ரோவேவ் ஆயுதத்தை சீனா பயன்​படுத்​தக்​கூடும்.

இதைத் தொடர்ந்தே அமெரிக்கா​வும் விண்​வெளி​யில் ஆயுதங்​களை குவித்து வரு​கிறது. இதை முதல்​முறை​யாக அமெரிக்க ராணுவம் பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளது. இதன் எதிர்​விளை​வாக ரஷ்​யா, சீனா உள்​ளிட்ட நாடு​களும் விண்​வெளி​யில்​ ஆயுதங்​களைக்​ குவிக்​கக்​கூடும்​. இவ்​வாறு நிபுணர்​கள்​ எச்சரித்துள்​ளனர்​.

SCROLL FOR NEXT