ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மார்ச் 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்கள் நடைபெற்றது. அதன்பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க ராணுவம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ‘ஈரானில் மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கினோம். ஈரான் போரில் 1,000-க்கும் மேற்பட்ட டொமஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இது அமெரிக்க ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் வாங்கும் எண்ணிக்கையை விட 10 மடங்கும் அதிகம். ஒரு டொமஹாக் ஏவுகணையின் விலை 3.6 மில்லியன் டாலர்.
இவை தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்தவை. ஈரான் போரில் 1,000-க்கும் மேற்பட்ட டொமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதால், அமெரிக்காவின் டொமஹாக் ஏவுகணையின் கையிருப்பு 3,000-மாக குறைந்துள்ளது. இதேபோல், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க 1,200 பேட்ரியாட் ஏவுகணைகளை ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது. இதன் விலை 4 மில்லியன் டாலருக்கு மேலாகும்.
கடந்தாண்டில் 600 பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்தது. மேலும், வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் 1,100 ஜாஸ்மர் ஏவுகணைகளையும் அமெரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்படுத்தியது. இதன் காரணமாக இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தில் தற்போது 1,500 மட்டுமே இருப்பில் உள்ளது. இது 600 மைல் தூரமுள்ள இலக்குகளைத் தாக்கும். இதன் விலை 1.1 மில்லியன் டாலர்.
1,000-க்கும் மேற்பட்ட ஏடிஏசிஎம்எஸ் என்ற தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களிலும் ஆயுத கையிருப்பு குறைந்துள்ளது.
ஈரானின் விலை குறைந்த ட்ரோன் தாக்குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலையுள்ள பேட்ரியாட் ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. காலியான ஆயுதங்களை மீண்டும் வாங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு வெகு நாட்களாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த ராணுவ முகாம்களைச் சரிசெய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. ஈரானும் பதிலடியாக 7 வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறி வைத்து ஏவுகணை, மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் சிலர் இறந்தனர். அமெரிக்க ராணுவ முகாம்களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்கள், போர் விமானங்கள், ஓடு தளங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.
அமெரிக்காவின் வான் பாதுகாப்பையும் மீறி ஈரானின் பழமையான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க ராணுவ முகாமுக்குள் தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்டகன் முழுமையாக பகிரவில்லை. இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அமெரிக்காவில் ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே கோபம் அடைந்துள்ளனர்.
சேத விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து பல வாரங்கள் ஆகியும், அது பற்றி எதையும் கூறாமல் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க வேண்டும் என பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தாண்டு ராணுவ பட்ஜெட்டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்றம் 838.5 பில்லியன் டாலர் அனுமதி அளித்திருந்தது.
ஈரான் போர் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் 11 பில்லியன் டாலர் செலவானதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறுகையில், “ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேதம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது. இவற்றை சரிசெய்ய பல ஆயிரம் கோடி செலவாகும்” என்றனர்.