மக்களவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கான முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள பொதிகை மலைப் பகுதியில் சூழலியல் சமநிலை மாறாமல் மலையேற்ற வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னைக்கு அருகிலுள்ள புலிகாட் ஏரி என்று அழைக்கப்படும் பழவேற்காடு ஏரியில் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில், பேர்ட் வாட்ச்சிங் என்று அழைக்கப்படும் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். மொத்தம் மூன்று புதிய பிரத்யேகப் பார்வை மையங்கள் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்படும்.
தமிழர்களின் தொன்மையான வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக ஆதிச்சநல்லூரில் நவீன கலாச்சார மையம் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் ஒடிசா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆமைகள் முட்டையிட்டு தங்களது குஞ்சுகளைப் பாதுகாக்க வசதி ஏற்படுத்தப்படும். அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இந்த மாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக 4 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும். அதேபோல் அந்த மாநிலங்களில் மருத்துவ சுற்றுலாவும் மேம்படுத்தப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் அந்த மாநிலங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி செலவிடப்படும்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் வகையில் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. கடற்கரை ஓரங்களில் அதிகப்படியான கனிம மணல் இருப்பு கொண்ட தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதன்மூலம் ஒருங்கிணைக்கப்படும். தற்போது அரிய வகை தாதுக்களுக்கு சீனா போன்ற நாடுகளை அதிகம் நம்பியிருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே அரிய வகை தாதுக்களை பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க இத்திட்டம் வகை செய்யும்.
இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம் சுமார் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதில் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும், அரிய வகை தாதுக்களுக்கான தனி இயக்கத்தை உருவாக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
இதற்காக 7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் மூலம் தயாரிக்கப்படும் அரியவகை காந்தங்கள், கனிமங்கள் ஆகியவை மின்சார வாகனங்கள், விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு உபகரணங்கள், காற்றாலை மின் உற்பத்திக்கு முதுகெலும்பாக அமையும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 புதிய புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 2 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை - ஹைதராபாத் மற்றும் சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.