பென்குயின் என்றதும் அன்டார்டிக்காவின் பனிப் பிரதேசம்தான் நினைவுக்கு வரும். அந்த அன்டார்டிக்கா பிரதேசத்தில் தன்னுடைய கூட்டத்தை விட்டு தனியே சென்ற ஒற்றை பென்குயின்தான் இப்போது இணையத்தில் நிரம்பிக் கிடக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் 2007-ம் ஆண்டு இயக்கிய 'Encounters at the End of the World' ஆவணப்படத்தின் காட்சிதான் 2026-ம் ஆண்டான தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்தக் காட்சியில், ஒரு பென்குயின் திடீரென தனது கூட்டத்தை விட்டு விலகி, சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைத்தொடரை நோக்கிச் செல்கிறது. தன்னுடன் வந்த மற்ற பென்குயின்கள் உணவு மற்றும் உயிர் வாழ்வதற்காக கடலை நோக்கிச் செல்லும் நிலையில், இந்த பென்குயின் மட்டும் தனியாக மலையை நோக்கிச் செல்வது அந்தக் காணொலியில் தெரிகிறது. அங்கு, கடல் இல்லை, உணவு இல்லை. மலைகள், பனி, உறைபனி மட்டுமே உள்ளது. தனியே செல்லும் பென்குயின் காணொலி, ஒவ்வொருவருடனும் தொடர்புடையதாக உணர வைக்கிறது. இதனால்தான், இந்த காணொலி இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த பென்குயின் ஏன் தனியே செல்ல வேண்டும், மற்றவர்களைப் போல தானும் சாதாரண வாழ்க்கை வாழாமல், புதிதாக ஏதோ ஒன்றை தேடிச் செல்கிறதா, மனச்சோர்வா, தனிமையை தேடிசெல்கிறா, இறந்துவிடுவோம் எனத் தெரிந்தும் அங்கு செல்கிறதா என பலரும் கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்புகின்றனர். இது குறித்து விஞ்ஞானிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், “இந்த பென்குயின் நடத்தை அரிது என்றாலும், நரம்பியல் பிரச்சினை, இனப்பெருக்க கால மன அழுத்தம், குழப்பத்தால் இவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” எனத் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த பென்குயின் ஏன் இப்படிச் செய்கிறது என்பது இதற்கு யாரிடமும் விடை இல்லை. இயக்குநர் ஹெர்சாக் தனது ஆவணப் படத்தில், ‘அந்த பென்குவினைத் தடுத்தாலும், அது மீண்டும் மலைகளை நோக்கியே செல்லும். இது ஒருவிதமான தற்கொலைப் பயணம் அல்லது அர்த்தமற்ற தேடல்’ என்று குறிப்பிடுகிறார். இந்த வீடியோவுடன் தற்போது ‘நிஹிலிசம்’ என்ற வார்த்தையும் வைரலாகி வருகிறது. நிஹிலிசம் என்பது ‘வாழ்க்கைக்கு என்று எந்தவொரு அர்த்தமும் இல்லை, எந்தவொரு மதிப்பும் இல்லை’ என்று நம்பும் ஒரு தத்துவ நிலைப்பாடு.
சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் பென்குயினின் செயலைத் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இந்த வீடியோவின் பின்னணியில் சேர்க்கப்படும் சோகமான இசை, அந்தத் தனிமையின் வலியை மேலும் ஆழமாக உணர வைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆவணப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, 2026-ல் வாழும் மனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.