மத்திய அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் 2026-ஐ புதிதாக அறிவித்துள்ளது.
தற்போது இபிஎஃப் விதிகளின்படி, ஊழியர்களுக்கான மாதச் சம்பள வரம்பு ரூ.15,000 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பிடிக்கப்படும் 12 சதவீதத் தொகையான ரூ.1,800 மட்டுமே இனி கட்டாயப் பங்களிப்பாக இருக்கும்.
ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், அவரின் கட்டாய இபிஎஃப் பிடித்தம் ரூ.1,800 மட்டுமே. எஞ்சிய தொகையை ஓய்வூதியச் சேமிப்பிற்காகச் செலுத்த விரும்புபவர்கள், தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் செலுத்தலாம்.
கூடுதல் தொகையைச் செலுத்தினால், அதற்கு இணையாக நிறுவனங்களும் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் என்கிற கட்டாயம் புதிய விதியில் இல்லை. நிறுவனங்கள் விரும்பினால் மட்டுமே கூடுதல் தொகையைச் செலுத்தலாம். மேலும், இந்த கூடுதல் பங்களிப்பை ஊழியர்களும் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளவோ அல்லது நிறுத்திக் கொள்ளவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்பு இபிஎஃப் கணக்கில் இருந்து முன்தொகை எடுப்பதற்கு 13 பிரிவுகள் இருந்தன. தற்போது அவை எளிமையாக்கப்பட்டு 3 முக்கிய பிரிவுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி: அத்தியாவசியத் தேவைகள் (மருத்துவம், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள் (வீடு கட்டுதல் அல்லது வாங்குதல்), சிறப்புச் சூழ்நிலைகள் ஆகிய பிரிவுகளின் கீழ் மிக எளிதாகப் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ஊழியர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் இருந்து தகுதியான தொகையில் 100 சதவீதம் வரை முன்தொகையாக எடுக்க அனுமதிக்கப்படுவர். இருப்பினும், அவசரக் காலத் தேவைக்காகக் கணக்கில் எப்போதும் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிஎஃப் பங்களிப்பை உறுதி செய்யும் முழுப் பொறுப்பும் முதன்மை நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தனிப் பதிவு செய்யாத பட்சத்தில், தொழிலாளர்களுக்கான பிஎஃப் தொகையைச் செலுத்துவதை முதன்மை நிறுவனமே கண்காணிக்க வேண்டும் என்று இபிஎஃப்ஓ விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.