இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “வயது அடிப்படையில் கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து பல்வேறு சமூக வலைதள நிறுவனங்களுடன் அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு நாட்டின் கலாசார சூழலையும் பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். டீப்ஃபேக் காணொலிகளைக் கண்டறிந்த 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. தற்போது ‘டீப்ஃபேக்' எனப்படும் போலி காணொலிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்போதுள்ள சூழ்நிலையில் சிறுவர்களுக்கு சமூக வலைதள அனுமதி அவசியமா என்பது குறித்து மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. எனினும், ஆஸ்திரேலியாவைப் போல 16 வயதுக்கு உட்பட்டோருக்கு முழுமையான தடை விதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை. 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் இதற்காக திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மத்தியில் தற்கொலை மரணங்கள், தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் போக்குகள் அதிகரித்த சூழலில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் இவ்வாறான தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் தடையானது, சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதால் ஏற்படும் சோஷியல் மீடியா அடிக்ஷன் பிரச்சினைகள், வயதுக்கு மீறிய விஷயங்களுக்கு ஆன்லைனில் எக்ஸ்போஸ் ஆவதால் குழந்தைகளுக்கு தம் சுயபிம்பத்தின் மீது ஏற்படும் குழப்பநிலை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுதல், செல்போன் பயன்பாட்டுக்கு அடிமையாதல் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கை என்று ஒருபுறத்திலிருந்து ஆதரவுக் குரல் குவிகிறது.
மறுபுறம், இவ்வாறாக தடை விதித்தல் என்பது வளரும் குழந்தைகளை ஒரு முக்கியமான தகவல் ஆதாரத்திலிருந்து விலக்கி வைக்கும் செயல். இது அவர்களின் சுய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் செயல். அதுமட்டுமின்றி அவர்களுக்கான ஓர் ஆன்லைன் சமூகத்தை உருவாக்கத் தடை விதிக்கும் எதேச்சதிகாரப் போக்கு என்று எதிர்ப்பும் பதிவாகி வருகிறது. அதேபோல் “இத்தகைய தடையானது, நலிந்த பின்னணி கொண்ட குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும். அவர்களுக்கு தகவல் பற்றாக்குறையும் ஏற்படும்” என்று குரல்களும் எழுந்து வருவது கவனிக்கத்தக்கது.