இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள்... குறிப்பாக, விலை குறையும் பொருட்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியாவுக்கும் 27 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. எனினும் 2013-ல் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒப்பந்தம் இந்திய - ஐரோப்பிய உறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணம். சர்வதேச பொருளாதார சூழலில் இந்த ஒப்பந்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தம், சிறுதொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோர் ஐரோப்பிய சந்தைகளை அதிகளவில் அணுகுவதற்கு வழிவகுக்கும்” என்றார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா பேசுகையில், “இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாய்” என்று வர்ணித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதியில் 99 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் முன்னுரிமை கிடைக்கும். இது இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சியைப் பன்மடங்கு அதிகரிக்கும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதோடு பெண்கள், கைவினைஞர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளிலேயே, சுமார் 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி இந்த ஒப்பந்தத்தின் கீழ் விலை குறையும் பொருட்கள் எவை என்பது பற்றி பார்ப்போம். ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின் விலை குறையும். இந்த ஒயினுக்கு தற்போது 150 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி இந்த வரி 20 சதவீதம் ஆக குறையும். அதேநேரம், இரண்டரை யூரோக்கு குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு வரி சலுகை இல்லை.
உருக்கு, ரசாயன பொருட்களுக்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் என்பதால் கட்டுமானம், தொழில் துறைகளில் மூலப் பொருட்களின் குறையும். அதேநேரம், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை, தோல், நகைகள் அதிக அளவில் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
ஐரோப்பியாவின் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார்களுக்கான இறக்குமதி வரி 100 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், 16 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட ஆடம்பர கார்களுக்கான வரி 40 சதவீதம் ஆக குறையும். இத்துடன் மேலும் 10 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது. ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களின் விலை கணிசமாக குறையும். இது இந்திய நுகர்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி சுத்திகரித்து தருகிறது இந்தியா. அதை ஐரோப்பா வாங்குகிறது. அதன்மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்கிறது. உக்ரைன் மீதான போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளை செயலிழக்க செய்யும் வகையில் ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது அதிருப்தி அளிக்கிறது’ அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.