பொது

சீனா சொதப்பியது எப்படி? - மக்கள் தொகை சரிவால் சிக்கல்!

செய்திப்பிரிவு

சமீபத்திய புள்ளி விவரத்தின்படி சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140 கோடியே 40 லட்சமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். அதேபோல், 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16 லட்சத்து 20 ஆயிரம், அதாவது 17 சதவீதம் குறைவாகும். இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகைப் பிரச்சினை குறித்தும், அது ஏன் பேசுபொருளானது என்பது பற்றியும் அலசுவோம்.

1962 பஞ்சம் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கெடுபிடியை அதிகரித்தது சீனா. இதனையடுத்து சீனா ‘ஒரே குழந்தை’ சட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1980-ல் இருந்து இச்சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. எத்தனை தீவிரம் என்றால், இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டிருந்த பெண்கள் கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டனர். குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் திணிக்கப்பட்டன. பெண் சிசு கொலைகள் நடந்தன. மறுபுறம் ஒரு குழந்தை மட்டுமே உள்ள பெற்றோருக்கு மகப்பேறு விடுப்பு தொடங்கி கவுரவ சான்றிதழ் வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

          

சீனாவின் ‘ஒரே குழந்தை’ சட்டம் போன்று உலகில் வேறெங்குமே மிகக் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்தக் கெடுபிடிகள் அமைந்தன. சுமார் 35 ஆண்டுகளாக நீடித்த சீனாவின் இந்தக் கெடுபிடியால் நிகழ்ந்த பக்கவாட்டு சேதாரம் தான் விகித்தாச்சார அடிப்படையில் ஆண் - பெண் பிறப்பு விகிதம் அதலபாதாளத்துக்குச் சென்றது.

தனி மனிதனுக்கு சமூக, பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது. கிட்டத்தட்ட அடிமைகளாகிப் போன இளைஞர்களைக் கொண்ட சமூகமாக சீன சமூகம் உருவாகியிருந்தது. அன்று அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்தது. இன்று சீன அரசுக்கு அழுத்தமாக உருவாகியுள்ளது. சீனாவில் இப்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அருகி வருகிறது.

2016-ல் தம்பதிகள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. பின்னர் 2021 தொடங்கி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்ததோடு அதனை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒரு காலத்தில் ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு அளித்த சீனா இப்போது அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் மானியம் வழங்குகிறது.

மக்கள் தொகை கணக்கில் சீனாவை இந்தியா கடந்த 2023-ல் விஞ்சியது. ஏற்கெனவே மக்கள் தொகை சரிவை மீட்டெடுப்படுதில் கவனம் செலுத்திய சீனா, இப்போது இன்னும் தீவிரமாக அதை நோக்கி முன்னேறி சலுகை மேல் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால், இப்போதிருக்கும் சீன இளைஞர்களின், குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள தம்பதிகளின் பார்வை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

ஒரு குழந்தையை வளர்ப்பது, அதுவும் சீன நகர்ப்புறத்தில் வளர்ப்பது என்றால் அதன் மீது செய்ய வேண்டிய செலவு தம்பதிகளை ஒன்றைத் தாண்டி பெற்றுக் கொள்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. “அரசாங்கம் ஊக்கத் தொகை கொடுக்கலாம்; ஆனால் இங்கே வீட்டு வசதி, கல்வி, மருத்துவம் எல்லாம் விண்ணை முட்டும் செலவை வைக்கிறதே” என்கின்றனர் சீன இளம் தலைமுறையினர். படித்து, பொருளாதார தன்னிறைவு பெற்ற பெண்கள், அடுத்தடுத்து குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தங்களது சுய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனக் கருதுகின்றனர்.

ஏற்கெனவே பணியிடங்களில் பாலின சமத்துவம் இல்லை. பிள்ளை பெற்றுக் கொள்ளும் வயதிலிருக்கும் பெண்கள் பணியிடத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் 3 குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை என்று பெண்கள் உஷாராகப் பின்வாங்குகின்றனர். அது மட்டுமின்றி கிட்டதட்ட 40 ஆண்டுகளாகவே ஒரே குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்ட சீனர்கள், அதுவே தங்களின் புதிய கலாச்சாரமாகிவிட்டதாக உணர்கின்றனர். ஒரு குழந்தை அல்லது குழந்தையே இல்லாத ‘கேர் ஃப்ரீ’ வாழ்க்கை முறையை அவர்கள் விரும்புகின்றனர்.

ஜென்ஸீ, மில்லனியல் தலைமுறையினர் தங்கள் பெற்றோர் அதிகக் குழந்தை பெற்றதற்காக அன்று அபராதம் விதித்த அரசுதான் இன்று நாங்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கத் தொகை தருவதாகச் சொல்கிறது. இந்த முரணை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அரசை நம்புவதற்கும் இல்லை என்று முற்றிலுமாக ‘ஆசை வார்த்தைகளை’ நிராகரிக்கின்றனர்.

சீனாவின் ஊக்குவிப்புகள் எல்லாம் எடுபடாமல் போகவே, இப்போது அந்த நாடு இழந்த மக்கள் வளத்தை மீட்டெடுக்க திணறிக் கொண்டிருக்கிறது. சீனா தனது சரிந்த மக்கள் தொகையை மீட்டெடுக்க கடும் பிரயத்தனம் செய்யும் நிலையில், மக்கள் தொகை நிபுணர்களோ சீனாவின் இந்த முயற்சிக்கு, பலன் கிடைப்பது மிகவும் கடினம் அல்லது இயலவே இயலாது என்றே இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன என்கின்றனர். இதற்கு, மக்கள் மனநிலையில் மாற்றம், நகர்ப்புற வாழ்வில் பெருகிவிட்ட செலவுகள், கலாச்சார மாற்றம் என பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர்.

ஒற்றைக் குழந்தை சட்டமாக இருந்த காலம்போய் மக்களின் கலாச்சாரமாகிவிட்டது. இந்நேரத்தில், சீனா இப்போது செய்யும் முயற்சிகள் எல்லாமே, மிகவும் குறைவு அல்லது மிகவும் தாமதமானது என்கின்றனர். சீனா மக்கள் தொகை சரிவை மீட்டெடுக்கும் முயற்சிகளைக் காட்டிலும், தனது பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புகளை குறைந்த மக்கள் தொகை, வயதானோர் அதிகரிக்கும் மக்கள் தொகையோடு இசைந்து செல்வதாக தகவமைப்பதே காலத்தின் தேவையாக இருக்கும் என்றும் யோசனை கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT