ஓய்வூதியப் பலன்கள் அல்லது சொத்து விற்பனை அல்லது போனஸ் மூலம் கணிசமான ஒரு தொகை கிடைக்கும்போது, அதனை வங்கிகளில் ‘நிலையான வைப்பு நிதி’, அதாவது எஃப்.டி என்பதும் ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் பாதுகாப்பாக முதலீடு செய்வதுதான் பலரது வழக்கம். ஆனால், இவ்வாறு மொத்தத் தொகையையும் ஒரே எஃப்.டி-யாக முதலீடு செய்வது சரியா? அல்லது இதில் மாற்று வழிகள் ஏதேனும் உள்ளதா என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிய உதாரணத்துடன் பார்ப்போம்.
விவேக், சமீர் ஆகிய இருவரும் நண்பர்கள். இருவருக்குமே ரூ.10 லட்சம் ரூபாய் போனஸ் தொகை கிடைத்தது. அதை வங்கியில் எஃப்.டி. திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தனர். விவேக் மொத்த 10 லட்சத்தையும் ஒரே எஃப்.டி. ஆக 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தார். ஒரே சான்றிதழ், ஒரே முதிர்வுத் தேதி, எந்தக் குழப்பமும் இல்லை என்று அவர் நினைத்தார். ஆனால், சமீர் கொஞ்சம் சாதுரியமாக யோசித்து, தனது பணத்தை தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 10 தனித்தனி எஃப்.டி.-களாகப் பிரித்து, அதே 3 ஆண்டுகள் கால அளவில் முதலீடு செய்தார்.
விவேக் இதைப் பார்த்து சிரித்து, ஒரே வட்டிக்கு ஏன் 10 மடங்கு பேப்பர் வேலை செய்கிறாய் என்று கேலி செய்தார். அதற்கு சமீர், வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும் என்று கூறி சிரித்துக் கொண்டார். சரியாக ஓராண்டு கழிந்தபோது, இருவருக்குமே எதிர்பாராத ஒரு அவசரத் தேவை ஏற்பட்டு, உடனடியாக 2 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.
விவேக் 2 லட்சம் ரூபாயை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றபோது, அவருடைய மொத்தப் பணமும், அதாவது 10 லட்சம் ரூபாயும் ஒரே எஃப்.டி.-யில் இருந்ததால், அவர் அதை பாதியிலேயே உடைக்க வேண்டியதாயிற்று. இதனால், முன்கூட்டியே எடுப்பதற்காக வங்கி அவருக்கு 10 லட்சத்துக்கும் 1 சதவீதம் அபராதம் விதித்தது. அதுமட்டுமின்றி, மீதமிருந்த 8 லட்சத்தை மீண்டும் டெபாசிட் செய்தபோது அன்றைய தேதியில் இருந்த குறைவான வட்டி விகிதமே அவருக்குக் கிடைத்தது. இதனால் அவர் எதிர்பார்த்த லாபத்தில் பெரும் தொகையை இழந்தார்.
மறுபுறம், சமீர் பதற்றமே இல்லாமல் வங்கிக்குச் சென்று, தன்னிடம் இருந்த 10 எஃப்.டி.-க்களில் சரியாக 2 எஃப்.டி.-க்களை, அதாவது 2 லட்சம் ரூபாய் மட்டும் உடைத்து தன் தேவையைப் பூர்த்தி செய்தார். அவர் அந்த 2 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே அபராதம் செலுத்தினார். அவருடைய மற்ற 8 எஃப்.டி.-க்கள், அதாவது 8 லட்சம் ரூபாய் அப்படியே பாதுகாப்பாக இருந்து, ஆரம்பத்தில் பேசிய அதே அதிகப்படியான வட்டியைத் தொடர்ந்து ஈட்டித் தந்தன.
இந்த உதாரணம் மூலம் நாம் அறிவது என்னவென்றால், பெரிய தொகையை ஒரே எஃப்.டி.-யில் போடுவதற்குப் பதிலாக, சமீரைப் போலப் பிரித்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனமானது. இது நமக்கு அவசரக் காலத்தில் சிறந்த பணப்புழக்கத்தைத் தருவதோடு, ஒரு சிறிய தேவைக்காக நமது மொத்த சேமிப்பின் வட்டியையும் இழக்காமல் பாதுகாக்கிறது.