பொது

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்?

செய்திப்பிரிவு

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கவனமாக அணுக வேண்டிய பிரச்சினை இது. எபோலா வைரஸ் முதன்முதலில் 1976-இல் தற்போதைய காங்கோ பகுதியில் கண்டறியப்பட்டது. தற்போது 17-ஆவது முறையாக எபோலா அந்நாட்டில் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கோவின் மிக மோசமான எபோலா பரவல் 2018-2020-க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது கிட்டத்தட்ட 2,300 பேர் உயிரிழந்தனர். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ‘பண்டிபுக்யோ’ என்னும் ஓர் அரிய வகை எபோலா வைரஸ், கடுமையான குருதிப்போக்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடியது என்பதால், தற்போது தீவிரமான நோயாக எபோலா கருதப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், வாந்தி போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது. எபோலா நோயைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ, மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தகைய ஆபத்தான நோய் பாதிப்பால் காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகள் ஸ்தம்பித்துள்ளன. 850-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கூடவே இதுவரை கண்டறியப்பட்டிருப்பதைக் காட்டிலும் நோய்ப் பரவல் தீவிரமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உலகச் சுகாதார நிறுவனத்தின் கவனத்துக்கு வந்திருக்கின்றன. இதன் காரணமாக, பன்னாட்டுச் சுகாதார விதிகளின்கீழ் உலகளாவிய கவலைக்குரிய பொதுச் சுகாதார நெருக்கடி நிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

நோய்ப் பரவலைக் கண்காணிக்கவும், தொற்றைக் கண்டறியவும், தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் அவசரச் செயல்பாட்டு மையங்களைப் பாதிக்கப்பட்ட நாடுகள் நிறுவ வேண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் வழிகாட்டி உள்ளது. எபோலா நெருக்கடியை எதிர்கொள்ளவும் பரவலைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இந்த உயிர்க்கொல்லி நோய்க்குத் தடுப்பூசி இல்லை என்பது மிகவும் ஆபத்தானது.

ஜைர் வகை எபோலா வைரஸ் தடுப்பூசிகள் இதற்கு வேலை செய்யாது என்பதால் ‘பண்டிபுக்யோ’வுக்கு எதிரான சோதனைக்கட்ட தடுப்பூசிகளைப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கொண்டு செல்ல உலகச் சுகாதார நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. வளர்ந்த நாடுகளின் நிதி உதவியுடன் சர்வதேச மருத்துவக் குழுக்களையும் அனுப்பி களப்பணிகளை வலுப்படுத்தும் பணியை விரைவில் உலகச் சுகாதார நிறுவனம் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை ‘பண்டிபுக்யோ’ வகை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்தியக் குடிமக்களும் மறு அறிவிப்பு வரும் வரை ஆப்ரிக்காவின் காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி இந்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

டெல்லியில் வரும் மே 28 முதல் 31வரை நடைபெறவிருந்த இந்திய - ஆப்ரிக்க மன்ற உச்சி மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் தங்களது சுகாதார உள்கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் சூழலில் சுகாதார நெருக்கடியும் ஏற்படுவது பெரும் கவலை அளிக்கிறது.

கரோனா பெருந்தொற்று போன்ற கடும் நெருக்கடி இப்போது இல்லை என்றாலும், எபோலா எளிதில் பரவக்கூடியது என்பதால் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.

SCROLL FOR NEXT