கனடாவில் வசிக்கும் மனா ஜம்பாலா என்ற ஏழாம் வகுப்பு மாணவி, 12 வயதிலேயே உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ‘ஏஐ’ பிசினஸ் மேக்னட்டாக உருவெடுத்துள்ளார். மூன்று நாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் இவரது ‘வொக்ஸா’ (Voxa) ஸ்டார்ட்-அப் உருவான கதை மிகவும் சுவாரசியமானது.
எல்லாமே மனாவின் தந்தை வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருந்துதான் தொடங்கியது. அங்கு ஊழியர்கள் பிஸியாக இருக்கும்போது, பல வாடிக்கையாளர்களின் போன் அழைப்புகளை எடுக்க முடியாமல் போவதை மனா கவனித்தார். இதனால் எவ்வளவு பிசினஸ் நஷ்டமாகும் தெரியுமா என்று யோசித்த அந்த 12 வயது மூளை, சும்மா இருக்கவில்லை. அதற்கு தீர்வாக மனா உருவாக்கியதுதான் ‘வொக்ஸா’.
இது சாதாரண செயலி அல்ல. 24 மணி நேரமும் அயராது உழைக்கும் ஒரு ‘ஏஐ குரல் உதவிச் செயலி’. அதாவது, AI Voice Assistant. உணவகங்கள், மருந்தகங்கள் என எந்த பிசினஸாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கூப்பிட்ட அடுத்த நொடி இந்த ஏஐ அக்கா லைனில் வந்துவிடுவார். அழகாகப் பேசி ஆர்டர்களை எடுப்பார். அப்பாயின்ட்மென்ட்களை புக் செய்வார். கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிப்பார். இன்று இந்தச் சேவை கனடா, இந்தியா, கம்போடியா ஆகிய மூன்று நாடுகளின் பிசினஸ் உலகை மிரட்டிக்கொண்டிருக்கிறது.
மனாவின் இந்தத் திறமைக்கு பின்னால் மிகுந்த உழைப்பு இருக்கிறது. 9 வயதில், மனா ‘பைதான்’ (Python) கோடிங் கற்றுக்கொண்டார். 11 வயதிலேயே சொந்தமாக ஏஐ தயாரிப்புகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார். சாட்ஜிபிடி (ChatGPT), கிளாட் (Claude) போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தினாலும், மனா அவற்றை அப்படியே காப்பி-பேஸ்ட் செய்யவில்லை. ஒவ்வொரு கோடையும் (Coding) தானே எழுதி, பிழைகளைத் திருத்தி, செதுக்கி செதுக்கி இந்த ‘வொக்ஸா’வை உருவாக்கியுள்ளார்.
இவரது அசாத்திய திறமையைக் கண்டு வியந்த இந்தியக் கல்லூரி ஒன்று, அறிவியல் போட்டியில் இவருக்கு சிறப்புப் பரிசு வழங்கிக் கவுரவித்தது. அதுமட்டுமல்லாமல், இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ‘1517 ஃபண்ட்’ என்ற சர்வதேச அமைப்பும் இவருக்கு அள்ளிக் கொடுத்து நிதியுதவி செய்துள்ளது.
“ஒரு போன் கால் அட்டெண்ட் செய்வதோடு என் திறமை முடிந்துவிடவில்லை” என்று சவால் விடுகிறார் மனா. இப்போது ‘வொக்ஸா ஏஜென்ட்ஸ்’ (Voxa Agents) என்ற அடுத்த லெவல் புராஜெக்ட்டில் இறங்கியுள்ளார். இதில் நீங்கள் சாதாரண ஆங்கிலத்தில் ஒரு வேலையைச் சொன்னால் போதும், பேக்-எண்டில் ஏஐ அதைத் தானாகவே செய்து முடித்துவிடுமாம்.
ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு பெரிய பிசினஸை நடத்தும் மனா, தன் குழந்தைப் பருவத்தை இழக்கவில்லை. மற்ற பிள்ளைகளை போலவே ஜாலியாக கால்பந்து விளையாடுகிறார், நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார். எதிர்கால வேலைவாய்ப்பைப் பற்றி யோசிக்கக் கூடத் தொடங்காத பிஞ்சு வயதில், உலக நாடுகளைத் தன் தொழில்நுட்பத்தால் கட்டிப்போட்டுள்ள மனா ஜம்பாலா, நிச்சயம் ஏஐ புரட்சியின் புதிய சூப்பர் ஸ்டார்தான்.