அலன் ரிட்ச்சன் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘வார் மெஷின்’. ஹாலிவுட்டின் வழக்கமான மசாலா ஆக்ஷன் பாணி கதையில், நவீன அறிவியல் புனைவை மிக நேர்த்தியாக இணைத்து படு விறுவிறுப்பான அனுபவத்தை தந்திருக்கிறார் இயக்குநர்.
அமெரிக்க ராணுவத்தின் ஒரு ரகசிய பிரிவைச் சேர்ந்த ஒரு குழு, உலகின் மிகவும் ஆபத்தான ஒரு பகுதிக்கு ஒரு முக்கியப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறது. ஆனால் அங்கு அவர்கள் செய்யும் ஒரு பெரிய தவறால் வெளிப்படும் ஒரு ஆபத்தான இயந்திரம், அவர்களை துரத்தி துரத்திக் கொல்கிறது. எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வரும் அந்த இயந்திரம் எங்கிருந்து வந்தது? அதனிடமிருந்து ராணுவக் குழுவினர் தப்பித்தார்களா என்பதே ‘வார் மெஷின்’ படத்தின் கதை.
இயக்குநர் பேட்ரிக் ஹியூஸ் இந்தப் படத்தை வெறுமனே துப்பாக்கி சண்டைகளும், ரத்தம் தெறிக்கும் வன்முறையும் நிறைந்த ஒரு வார் திரைப்படமாக மட்டுமே கையாளாமால், அதில் மிக லாவகமாக அறிவியல் புனைவையும், கச்சிதமான எமோஷனலான பின்னணியையும் சேர்த்ததே இப்படத்தின் வெற்றி என்று சொல்லவேண்டும்.
‘வார் மெஷின்’ ஒரு தரமான ஆக்ஷன் அனுபவத்தைத் தேடும் ரசிகர்களுக்கான மிகச் சிறந்த தேர்வு. நீங்கள் ‘ப்ரிடேட்டர்’, ‘டெர்மினேட்டர்’ போன்ற படங்களின் தீவிர விசிறியாக இருந்தால் இப்படம் உங்களுக்கு ஓர் அறுசுவை விருந்து. நல்ல விறுவிறுப்பான த்ரில்லர்களை விரும்புபவர்களும் தாராளமான இதனை நம்பி பார்க்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.