கீவ்: போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான அமைதித்திட்டம் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவிடம்சமர்ப்பிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 28 அம்ச பொது அமைதித் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கியது.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் அளித்த பேட்டியில், ‘‘மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையே உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெலன்ஸ்கி நேற்று அளித்துள்ள பேட்டியில், “ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதித் திட்டங்களை ரஷ்யாவிடம் இன்னும் சில நாட்களில் சமர்ப்பிக்க உள்ளோம்.
அமெரிக்க நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு உக்ரைன் பிரதிநிதிகள் செல்லவுள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்காவின் அமைதித் திட்டம் நிச்சயம் செயல்படுத்தக்கூடியது’’ என்றார்.