அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

 
உலகம்

அணு ஆயுதம் முதல் ஏஐ தொழில்நுட்பம் வரை - ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பல் அம்சங்கள் என்னென்ன?

பாரதி ஆனந்த்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய போர்க் கப்பல் கட்டுமானத் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தக் கப்பல்களுக்கு தனது பெயரையும் சூட்டியுள்ளார். ‘ட்ரம்ப் க்ளாஸ்’ கப்பல்கள் என்று இவை அழைக்கப்படும். இந்த வகை போர்க் கப்பல்கள் கொண்ட படை ‘கோலட்ன் ஃப்ளீட்’ எனப்படும் என்று பெருமிதத்தோடு ட்ரம்ப் அறிவித்தார். 

பொதுவாக அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் அவர்கள் பணிக்காலத்தில் நாட்டின் போர்க் கப்பலுக்கு அவர்களின் பெயர் சூட்டப்படுவதில்லை. அதிலிருந்து தனக்கு விதிவிலக்கு கொடுத்துக் கொண்டு அவற்றுக்கு சொந்த நாமகரணம் செய்துள்ளார் ட்ரம்ப்.

மேலும், அவர் ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பல்களை அறிவித்தபோது அவருக்கு இருபுறமும் அந்தக் கப்பலின் மாதிரி தோற்றம் கொண்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பல்களின் பிரம்மாண்டத்தை உணர்த்துவதாக இருந்தன.

அப்படி என்ன ஸ்பெஷல்? - இந்தக் கப்பல் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டன் வரை எடை கொண்டிருக்கும். அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய போர்க் கப்பலாக இருக்கும். இதில் சாதாரண ஏவுகணைகள் தொடங்கி லேசர், ஹைபர்சோனிக், தொலைதூர ஏவுகணைகள் வரை அனைத்தும் இருக்கும். மேம்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் இருக்கும். அணு ஆயுதங்களும் கூட இருக்கும். இந்தக் கப்பல் கட்டி முடிக்கப்படுவதற்குள் இப்போது ஆய்வில் இருக்கும் இன்னும் பல நவீன ஆயுதங்களும் இணைக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.

இந்த பிரம்மாண்ட கப்பல் பற்றி ட்ரம்ப் ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாளிகையில் இருந்து பேட்டி கொடுத்தார். அப்போது ட்ரம்ப்புடன் பென்டகன் ராணுவத் தலைமையகத்தின் தலைவர் பீட் ஹெக்ஸத் இருந்தார். கூடவே வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கடற்படை செயலர் ஜான் ஃபீலன் இருந்தனர். 

“அமெரிக்காவின் மிகப் பெரிய கப்பல் கட்டுமான சக்தியை மீட்டெடுக்கப் போகிறோம். உலகிலேயே அமெரிக்காவிடம் தான் மிகவும் சக்திவாய்ந்த கப்பல்படை உள்ளது என்பதை மெய்ப்பிப்போம். நம்மிடம் மிகப் பெரிய போர்க் கப்பல்கள் இருந்துள்ளன. ஆனால் அவற்றைவிடவும் இந்தக் கப்பல் பெரியது. இந்த ட்ரம்ப் க்ளாஸ் கப்பல்கள் 25 வரை கட்டத் திட்டமுள்ளது. ஆனால், முதல் கட்டமாக 2 கப்பல்கள் கட்டப்படும். அவற்றின் கட்டுமானப் பணி இரண்டரை ஆண்டுகளில் முடிவுறும். இந்தக் கப்பல் கட்டுமானப் பணி நிமித்தமாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும்.”
டொனால்டு ட்ரம்ப்

மெகா போர்க் கப்பலில் ட்ரம்ப் ஆர்வம் ஏன்? 

அமெரிக்க கடற்படை வசம் இருந்த யுஎஸ்எஸ் மிசோரி என்ற போர்க் கப்பல் மிகவும் பிரபலமானது. இது 1945-ல் ஜப்பானை அமெரிக்காவிடம் சரணடைய வைத்ததில் மிகப் பெரிய பங்காற்றியது. இந்தப் போர்க்கப்பல் 887 அடி நீளம் கொண்டது. 58,000 எடை கொண்டது. அதன் பின்னர் தற்போது அமெரிக்கா வசம் இருக்கும் பெரிய போர்க் கப்பல்கள் என்றால் அவை ஜும்வைத் டெஸ்ட்ராயர்ஸ் ரக கப்பல்கள். இவை 15 ஆயிரம் டன் எடை கொண்டவை. ஆனால், இப்போது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டன் வரையிலான எடை கொண்ட பிரம்மாண்ட போர்க் கப்பல் கட்டுமானத்தை ட்ரம்ப் அறிவித்துள்ளது. இதுவே அதன் பின்னணியைப் பற்றியும் பேசத் தூண்டியுள்ளது.

அண்மையில் பென்டகன் ராணுவத் தலைமையகத் தலைவர் ஃபீலன் அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “ட்ரம்ப் பிரம்மாண்டமான, அழகான போர்க் கப்பல்கள் வேண்டும் என்றார். அதில் பல்வேறு வசதிகள் இருக்க வேண்டும். போக்குவரத்துக்கான கப்பல்களையும் அது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார். அதன்படிதான் இந்த ட்ரம்ப் க்ளாஸ் போர்க் கப்பல்கள் உருவாக்கப்படவுள்ளன.

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்னர் தான் அமெரிக்க கடற்படை தரப்பிலிருந்து யுஎஸ் கடலோர காவற்படையின் தேசிய பாதுகாப்பு கப்பல்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ட்ரம்ப் க்ளாஸ் கப்பல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அண்மைக்காலமாக செங்கடல் முதல் கரீபியன் கடல் வரை நடக்கும் தாக்குதல் நடவடிக்கைகள், கடல்பரப்பில் பலத்தை அதிகரிப்பதை அவசியமாக்குகிறது” என்றார்.

போர்க் கப்பல் கட்டுமானத்தில் சீனாவுக்கு போட்டியாக ட்ரம்ப் தன்னை நிறுவ வேண்டும் என்பதோடு அண்டை நாடான வெனிசுலா தொடங்கி தொலை தூரத்தில் உள்ள சீனா வரை தன் பலத்தைப் பறைச்சாற்ற விரும்புகிறார். அதன் விளைவே இந்த ‘ட்ரம்ப் க்ளாஸ்’ போர்க் கப்பலின் அறிவிப்பு என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

வெனிசுலா பதற்றம் அதிகரிக்கும் சூழலில்...

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுடன் அமெரிக்காவுக்கு நீண்ட காலமாகவே முட்டல் மோதல் உண்டு. வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை கடந்த 2013-ல் இருந்து கடுமையாக அதிகரித்துள்ளது. 80 லட்சம் பேர் இந்தக் காலக்கட்டத்தில் வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்ததாக ட்ரம்ப் கூறுகிறார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சட்டவிரோத குடியேறிகளை திருப்பியனுப்பும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவுடனான விரோதம் இன்னும் தடித்துள்ளது. அதுபோல் கொக்கைன், ஃபெண்டானில் புழக்கமும் வெனிசுலா வழியாகவே அமெரிக்காவில் அதிகரித்தது என்பது ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு.

வெனிசுலாவின் ட்ரென் டி அரகுவா மற்றும் கார்டல் டி லாஸ் சோல்ஸ் ஆகிய இரண்டு கிரிமினல் கும்பல்களால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ட்ரம்ப் கூறுகிறார். இந்தக் கும்பல்கள் போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றன. இந்த இரு குழுக்களையும் ட்ரம்ப் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் இணைத்துள்ளார்.

இந்த சர்ச்சைகள் முற்றிய நிலையில், தற்போது ட்ரம்ப் வெனிசுலாவின் கடல்பரப்புக்குள் எந்தவித எண்ணெய் டேங்கர் கப்பல்கள் உள்ளே நுழையாதபடியும், அங்கிருந்து வெளியேற முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்ன். மேலும், வெளிசுலாவுக்கு செல்ல வேண்டிய இரண்டு எண்ணெய் டாங்கர்களையும் சிறைப்பிடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் போர்க் கப்பல்களுள் ஒன்று தயார் நிலையில், வெனிசுலாவை நோக்கி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகையச் சூழலில் ட்ரம்ப், கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ட்ரம்ப் க்ளாஸ் போர்க் கப்பல் கட்டுமானத்தை அறிவித்திருப்பது கவனம் பெறுகிறது.

ட்ரம்ப் க்ளாஸ் போர்க் கப்பல்கள் பற்றிய அறிவிப்பின்போதே, “இது அமெரிக்க கப்பல் கட்டுமானத் துறைக்கு வலுசேர்ப்பதோடு, இத்தகைய பிரம்மாண்ட கப்பல்களைப் பார்த்து தொலைதூர எதிரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். இதில் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சேர்க்கப் போகிறோம்” என்று ட்ரம்ப் கூறியது இத்தகைய போர்க் கப்பல்களுக்கான நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

SCROLL FOR NEXT