டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களது ராணுவ வலிமை மற்றும் தளவாடங்கள் குறித்த உங்களது (அமெரிக்கா) உளவுத் தகவல்கள் முழு மையானவை அல்ல. எங்களது பரந்த வியூகத் திறன்கள் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாது.
ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தளங்களை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாக ட்ரம்ப் தப்புக் கணக்கு போட வேண்டாம். எங்களது ஏவுகணை உற்பத்தி மையங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணு போர் முறைகளுக்கான கட்டமைப்புகள் என அனைத்தும் எவ்வித பாதிப்புமின்றி முழு அளவில் செயல்பாட்டில் உள்ளன. எனவே, இதுபோன்ற தவறான அனுமானங்கள், நீங்கள் ஏற்கெனவே சிக்கியுள்ள இக்கட்டான நிலையை மேலும் ஆழமாக்கும்.
எங்களது ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் அமைப்புகளைக் கணக்கிட முயற்சி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்; அதில் தோல்விதான் ஏற்படும். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் மீது மிக வலுவான, பரந்த மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் தொடரும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா அவமானத்தையும் நிரந்தர சரணாகதியையும் அடையும் வரையில் இந்த போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.