நியூயார்க்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் வோல்கர் துர்க் நேற்று முன்தினம் ஜெனிவாவில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடந்து வரும் போராட்டங்கள், வன்முறைகள் கவலை அளிக்கின்றன. அங்குள்ள கூட்டு அவாமி போராட்டக் குழுவை (ஜேஏஏசி) சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையிலான மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு நடந்து வரும் போராட்டத்தால் அந்த மண்டலத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எனவே, போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து நடுநிலையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அமைதியின்மை தொடர்பான அனைத்து உயிரிழப்புகள் குறித்தும் விரைவான, முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்ட ஜேஏஏசி அமைப்பினருக்கு சட்ட ஆலோசனை வழங்குதல், அவர்களது குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளும் விஷயங்கள் போன்றவை முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கு விதிக்கப்பட்டுள்ள இணையச் சேவை கட்டுப்பாட்டுகளை நீக்க வேண்டும். உள்ளூர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வு காண அர்த்தமுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.