அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகிறார் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஊடகத்துக்கு ரூபியோ அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியா.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. நாங்கள் மோடியின் தீவிர ரசிகர்கள்.
வர்த்தகம், பாதுகாப்பு, அரிய வகை கனிமங்கள், சர்வதேச கடல் பகுதிகளில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். இரு நாடுகள் இடையிலான உறவில் அவர்கள் பாலமாகவும் செயல்படுகின்றனர்.
அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினர். இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. குவாட் கூட்டமைப்பில் இரு நாடுகளும் ஒன்றிணந்து செயல்பட்டு வருகின்றன. விரைவில் குவாட் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வார். இவ்வாறு மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். கடந்த ஆண்டு ஜனவரியில் 2-வது முறை அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றார்.
இதன்பிறகு அவர் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவில்லை. எனவே அவரது அடுத்த ஆண்டு டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.