அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் 8-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஈரானில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஈரானின் வான் பாதுகாப்பு கவசங்களில் 80 சதவீதம் அழிக்கப்பட்டு உள்ளது. ஈரான் கடற்படையின் 30 போர்க்கப்பல்கள் தகர்க்கப்பட்டு உள்ளன.
அந்த நாட்டு விமானப் படையில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட 174 நகரங்களின் அரசு கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன.
மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ தளங்கள் செயல்படுகின்றன. அவற்றை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில், தாட் வான் பாதுகாப்பு கவசத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.22,000 கோடி ஆகும். 8 நாள் போரில் அமெரிக்காவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 6 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நாடு முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. மேலும் அண்டை நாடுகளிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த நாட்டின் அத்துமீறல்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கின் அமைதி பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஈரானின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய இழப்பை அந்த நாடு சந்தித்து உள்ளது. அந்த நாட்டை நரகத்துக்கு தள்ளி உள்ளோம். இதற்காக ஈரானின் அண்டை நாடுகள், எனக்கு நன்றி தெரிவித்துள்ளன.
இன்றைய தினம் (சனிக்கிழமை) ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். ஈரான் சரண் அடையும். இல்லையெனில் முழுமையாக வீழ்ச்சி அடையும். ஈரான் ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்க்கப்பல்கள் குவிப்பு: பிரிட்டனின் குளோஸ்டர்ஷையர் விமானப் படைத் தளம், இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் கூட்டு விமானப் படைத் தளத்தில் போர் விமானங்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-1 லான்சர், பி-2 ஸ்பிரிட், பி-52 ஸ்ட்ராடோபோர்ட்ரஸ் ஆகிய போர் விமானங்கள் இரு விமானப் படைத் தளங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர் போர்டு, வின்ஸ்டன் எஸ் சர்ச்சில், மாஹன், பெயின்பிரிட்ஜ், ரூஸ்வெல்ட், பல்கேலி, தாமஸ்ஹட்னர் ஆகிய போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இந்த போர்க்கப்பல்கள் ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அரபிக் கடலில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், பிராங்க் இ பீட்டர்ன், ஸ்ப்ரூயன்ஸ், மைக்கேல் முர்பி, மெக்பால், ஜான் பின், மிலியஸ், டெல்பெர்ட் டி பிளாக், பிக்னே, மிட்சர் ஆகிய போர்க்கப்பல்கள் முகாமிட்டு ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இவை தவிர பிரிட்டனின் எச்எம்எஸ் டிராகன், பிரான்ஸின் சார்லஸ் டி கல்லே, எப்எஸ் லாங்குடாக், கிரீஸ் நாட்டின் பசாரா, கிமோன் போர்க்கப்பல்களும் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.