வாஷிங்டன்: நேட்டோ ஒரு ‘காகிதப் புலி' என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் இணைய வேண்டும் என்றும் இதற்காக தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் இதழுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ‘‘ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு நட்பு நாடுகள் ஆதரவு அளிக்கத் தவறியதால், நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறேன்’’ என்றார்.
நேட்டோ கூட்டணியை ஒரு ‘காகிதப் புலி' என்று வர்ணித்த ட்ரம்ப், நேட்டோவின் நம்பகத்தன்மை குறித்து தனக்கு நீண்டகாலமாகவே சந்தேகம் இருந்ததாகவும் கூறினார். பிரிட்டனின் போர்க்கப்பல் படையின் நிலையை நேரடியாகச் சாடிய ட்ரம்ப், ‘‘உங்களிடம் ஒரு கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமை வாய்ந்தவர்கள், உங்களிடம் இருந்த விமானம் தாங்கி கப்பல்களும் வேலை செய்யவில்லை’’ என்றார்.
இது எங்கள் போர் அல்ல
ட்ரம்பின் இந்தக் கருத்து பற்றி பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, “பிரிட்டன் நேட்டோ அமைப்புக்கு முழுமையாகக் கட்டுப்பட்டிருக்கிறது. நேட்டோ என்பது உலகம் கண்ட மிகச்சிறந்த மற்றும் பயனுள்ள ராணுவக் கூட்டணி.
என் மீதும் மற்றவர்கள் மீதும் என்ன அழுத்தம் இருந்தாலும், என்ன சலசலப்புகள் எழுந்தாலும், பிரிட்டனின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டே செயல்படுவேன். இது எங்களுடைய போர் அல்ல. இதில் எங்களை இழுக்க முடியாது’’ என்றார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக, பிரிட்டன் சார்பில் சர்வதேச ராஜதந்திர மாநாடு நடத்தப்படும் என்றும் ஸ்டார்மர் அறிவித்தார்.
முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையில் கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு அறிக்கையில் 35 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வெளியுறவுச் செயலாளர் யவெட் கூப்பர் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார் என்றும், ஈரான் போருக்குப் பிந்தைய காலத்துக்கான பாதுகாப்பு திட்டங்களில் ராணுவத் திட்டமிடுபவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ராணுவ பலம் மற்றும் ராஜதந்திர செயல்பாடுகள் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த முன்னணி, நிலைத்தன்மையை மீட்டெடுக்கத் தேவை என்று ஸ்டார்மர் கூறினார்.