உலகம்

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்: முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதலை தொடங்​கின. இரு தரப்​புக்​கும் இடையே சுமார் 40 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது.

முதலில் பாகிஸ்​தான் தரப்​பில் அமை​திப் பேச்​சு​வார்த்​தைகள் முன்​னெடுத்​துச் செல்​லப்​பட்​டன. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெற​வில்​லை. தற்​போது கத்​தார் தரப்​பில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதற்​காக அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் கத்​தார் தலைநகர் தோஹா​வில் முகாமிட்டு உள்​ளனர். பல்​வேறு விவ​காரங்​களில் அமெரிக்​கா, ஈரான் இடையே உடன்​பாடு​கள் எட்​டப்​பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின.

இந்த சூழலில் ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள ராணுவ நிலைகளைக் குறி​வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. குறிப்​பாக ஈரானின் முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​ணிவெடிகளை வீசிக் கொண்​டிருந்த ஈரான் ராணுவ படகு​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பறந்த அமெரிக்க போர் விமானத்தைக் குறி​வைத்து ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் இருந்து ஏவு​கணை​கள் ஏவப்​பட்​டன. மேலும் அமெரிக்க போர்க்​கப்​பல்​களுக்கு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தும் வகை​யில் ஈரானின் அதி​விரைவு ரோந்து படகு​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் வலம் வந்​தன. இந்த ரோந்துபடகு​கள் மூலம் கடலில் கண்​ணிவெடிகளும் வீசப்​பட்​டன.

எனவே தற்​காப்பு நடவடிக்​கைக்​காக ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகுதி மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. ஈரானின் ஏவு​கணை தளங்​களைக் குறி​வைத்து அமெரிக்க போர் விமானங்​கள் குண்​டு​களை வீசின. மேலும் கத்​தார், பஹ்ரைன், குவைத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களில் இருந்து ஈரானை குறி​வைத்து ஹிமார்ஸ் ரக ஏவு​கணை​களும் வீசப்​பட்​டன.

அமெரிக்க போர்க்​கப்​பல்​களை நெருங்கி வந்த ஈரான் ரோந்து படகு​கள் மீது போர் விமானங்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாங்​கள் போர் நிறுத்​தத்தை மீற​வில்​லை. தற்​காப்​புக்​காகவே தாக்​குதல் நடத்​தினோம். இவ்​வாறு அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இதுதொடர்​பாக ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரான் மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​கா​வின் எப் 35 ரகபோர் விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்​ளோம். அந்த நாட்​டின் எம்​கியூ-9 ரீப்​பர் வகையை சேர்ந்த 2 ட்ரோன்​களை சுட்டு வீழ்த்​தி​யிருக்​கிறோம். ஹார்​முஸ் ஜலசந்​தியை யார் நெருங்​கி​னாலும் தாக்​குதல் நடத்​து​வோம்.

தற்​போது அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி, பந்​தர் அப்​பாஸ் எல்லை வரம்​புக்​குள் மட்​டுமே தகுந்த பதிலடியை கொடுத்​திருக்​கிறோம். இனிமேலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால் ஒட்​டுமொத்த வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் தொடங்​கப்​படும்.இவ்​வாறு ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்ட அறிக்கை யில், “ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா விடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சர்வதேச அணு சக்தி ஆணையத்தின் மேற்பார்வையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்பட வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா வெளியிட்ட அறிக்கையில், “எந்தசூழலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்” என்று எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT