டெஹ்ரான்: ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் ராக்கெட் ஏவுதளங்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்பல் மற்றும் படகுகள் அழிக்கப்பட்டன.
அமெரிக்கா, ஈரான் இடையே ஆகஸ்ட் 17-ம் தேதி போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள லராக் தீவை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தின. அந்தத் தீவில் அமைக்கப்பட்டிருந்த 2 ஏவுகணை தளங்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்பல் மற்றும் ஏராளமான படகுகள் அழிக்கப்பட்டன. இதில் ஈரான் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் பதில் தாக்குதல்
அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஜோர்டானில் உள்ள இரு அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் வடக்குப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜோர்டானின் கிங் ஹுசைன், அல் - அஸ்ராக் விமானப்படைத் தளங்கள் நோக்கி சீறிப் பாய்ந்தன. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் அழிக்கப்பட்டன.
சில ஏவுகணைகள் ஜோர்டான் விமானப் படைத் தளங்களில் விழுந்து வெடித்தன. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அருகேயுள்ள அல் மின்ஹாட் விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அந்த ட்ரோன்கள் நடுவானில் அழிக்கப்பட்டன. அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் ஏஐ வீடியோ
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட இரு வீடியோக்களை நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.
கார்க் தீவில் உள்ள எண்ணெய் கிணறுகள், எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து வெடித்துச் சிதறும் காட்சிகள் ஏஐ வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் மூண்டிருப்பதால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று சுமார் 83 எண்ணெய் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கியிருக்கிறது.
திடீர் தாக்குதல் ஏன்?
உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வரைபடத்தில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
ஈரானும் ஓமனும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இரு நாடுகளும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்லும் ஈரானின் லாரக் தீவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தீவு பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல்களிடம் இருந்து ஈரான் ராணுவம் தலா ரூ.19 கோடி சுங்கக் கட்டணம் வசூலித்து வந்தது. ஈரானுடன் இணைந்து செயல்பட்டால் ஓமனின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.