உலகம்

‘சட்டத்துக்கு முரணானது’ - 75 நாடுகளுக்கான ட்ரம்பின் விசா தடை செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

டெக்ஸ்டர்

நியூயார்க்: உலகின் 75 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்காக விசா வழங்குவதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த தடை செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப்பின் தீவிரக் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜேனட் வர்காஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ட்ரம்ப் அரசின் இந்த கொள்கை "சட்டத்துக்குப் முரணானது" என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தமக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்த இந்த விசா தடையின் கீழ், ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈரான், ஈராக், நைஜீரியா, சோமாலியா, தாய்லாந்து மற்றும் ஏமன் உட்பட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியேற்ற விசா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆபத்து நிறைந்த இந்த நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளால் அமெரிக்காவின் நலத்திட்டங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதையும், அவர்கள் நாட்டுக்குச் சுமையாக மாறுவதையும் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு விண்ணப்பதாரர் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் மட்டுமே காரணியாக வைத்து விசா மறுக்கக் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது தவறானது என நீதிபதி வர்காஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கொள்கையின் அடிப்படையில் இதுவரை நிராகரிக்கப்பட்ட அனைத்து விசா மறுப்புகளையும் இந்த தீர்ப்பு ரத்து செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், லட்சக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றுவதாக வாக்குறுதி அளித்த ட்ரம்ப், மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து எல்லைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசுக்கு உரிமை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT