பெய்ஜிங்: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டி உள்ளது. இதனிடையே, அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தலாம். போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம். இதற்காக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக உள்ளது.
போரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் உட்பட வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களுடன் சீன அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐக்கிய அரபு அமீரகத்தை, சீனா ஆதரிக்கும். பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முயற்சிப்பதில் மற்ற வளைகுடா நாடுகளையும் சீனா ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.