உலகம்

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி: ஜே.டி.வான்ஸின் கருத்தும், ஈரானின் எதிர்வினையும்

வெற்றி மயிலோன்

இஸ்லாமாபாத்: மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு இறுதியான மற்றும் சிறந்த சலுகையை வழங்கிய பின்னர் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்காலிக போர்​நிறுத்​தத்தை அறி​வித்​தன. இந்த போர்​நிறுத்​தம் 2 வாரங்​களுக்கு மட்​டும் அமலில் இருக்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

          

இதற்கிடையே, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்ப்பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்​பில் அந்த நாட்டு நாடாளு​மன்ற சபாநாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்​சி, பாது​காப்​புச் செயலர் அலி அக்​பர் அகம​தி​யான், ஈரான் மத்​திய வங்கி ஆளுநர் அப்​தோல் நாசர் ஹெம்​மாட்டி ஆகியோ​ரும் கலந்துகொண்டனர். பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் இஷாக் டார், உள்​துறை அமைச்​சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இருதரப்​புக்​கும் இடையே சமரச தூது​வர்​களாக செயல்​பட்​டனர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இன்று (ஏப்ரல் 12) அதிகாலையில் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்க அதிகாரிகள் ஈரானுடனான பேச்சுவார்த்தையிலிருந்து எந்தவொரு ஒப்பந்தமும் இன்றி வெளியேறி, அமெரிக்காவிற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளோம்.

21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், இரு தரப்பினராலும் கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க முடியாததால், ஈரானுடனான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் அற்புதமான விருந்தோம்பிகள்" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஆனல், இரு தரப்பினருக்கும் இடையே ஏராளமான செய்திகளும், தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பல விவகாரங்களில் ஒரு புரிதலை எட்டியுள்ளன. அதே வேளையில் இரண்டு முதல் மூன்று முக்கியமான விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஒரே ஒரு சந்திப்பிலேயே ஒரு முழுமையான ஒப்பந்தத்தை எட்டிவிட முடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பது இயல்பானதே. வேறு யாரும் கூட அத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை."

இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது எதிர் தரப்பின் தீவிரத்தன்மை மற்றும் நம்பிக்கையை சார்ந்துள்ளது. ஈரானின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் அங்கீகரிக்கப்படுவதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தம் ஏற்படும். இப்போது பந்து அமெரிக்காவின் கைகளில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் ஈரானுக்கு எந்த அவசரமும் இல்லை" என்று கூறினார்.

இதுகுறித்து கானாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா தனது துணை அதிபரை இஸ்லாமாபாத்திற்கு விமானத்தில் அனுப்பியது. 21 மணி நேரப் பேச்சுவார்த்தையில், போரின் மூலம் அடைய முடியாத அனைத்தையும் அவர்கள் கோரினர். ஆனால், ஈரான் ஒரு பெரிய இல்லை என்று கூறிவிட்டது. பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் மூடப்பட்டுள்ளது. வான்ஸ் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார். மீண்டும் ஈரானின் வார்த்தை மட்டுமே முக்கியமானது. மானத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு வேறு வழியே இல்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT