அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். படம்: பிடிஐ
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே நேற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உட்பட 14 அம்ச திட்டத்தை அமல்படுத்த இருதரப்பும் உறுதி அளித்து உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர் நிறுத்தத்தை அமல் செய்தன. ஆனால் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இருதரப்பும் அவ்வப்போது தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன. பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இருதரப்பு இடையே சமரச முயற்சிகளில் ஈடுபட்டன. இதன்காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 19-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஒருநாள் முன்னதாகவே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள வெர்சாய் அரண்மனையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நேற்று விருந்து அளிக்கப்பட்டது. அப்போது அவர் மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதேபோல ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்தபடி அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளேன். உலக அமைதி, பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதில் ஈரான் உறுதியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். சமரச தூதர் என்ற வகையில் அமெரிக்கா, ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் மின்னணு முறையில் கையெழுத்திட்டார். அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி ஆகியோருக்கு நன்றி.
சமரச முயற்சிகளில் ஈடுபட்ட கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து நாடுகளின் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு: ‘அமெரிக்கா - ஈரான் இடையே 111 நாட்கள் நீடித்த பதற்றம் தற்போது முழுமையாக தணிந்திருக்கிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். போர் காரணமாக இதுவரை ரூ.122 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளன. உரத் தட்டுப் பாட்டால் பல்வேறு நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் எழுந்திருக்கிறது. அமைதி ஒப்பந்தம் காரணமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமுக தீர்வு காணப்பட்டு உள்ளது’ என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.