கோப்புப் படம்

 
உலகம்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்

பயங்கர வெடிச் சத்தத்தால் பரபரப்பு

டெக்ஸ்டர்

ரியாத்: சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இன்று (மார்ச் 3) அதிகாலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்திற்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, சிறிய அளவிலான தீ விபத்தும் ஏற்பட்டது. 

          

அங்கிருந்தவர்கள் இரண்டு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ரியாத் தூதரகத்தின் மீதான இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதால், சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தங்களது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT