உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் குவிப்பு - ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் தீவிரம்?

மோகன் கணபதி

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.

          

இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. யுரேனிய செறிவூட்டலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த வாரம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், ஈரான் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், சில பிரச்சினைகளில் சிக்கல் நீடிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. 2003-ல் ஈராக்குக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா இப்பகுதியில் படைகளை குவித்தது. அதன் பிறகு தற்போது தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதையே இது காட்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை வாரக்கணக்கில் விரிவடையும் என்றும் முழு அளவிலான போரைப் போன்று இருக்கும் என்றும் ஆக்சியோஸ் குறிப்பிட்டுள்ளது.

2003-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதலாக இது இருக்கப் போகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மத்திய கிழக்கு நோக்கி தனது அதிநவீன F-35, F-22 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா நகர்த்தி வருகிறது. USS ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல் ஏற்கனவே ஈரான் கடற்கரையின் எல்லைக்குள் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிடுவாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தாக்குதல் நடத்த அவர் முடிவு செய்தால், அது ஈரான் ஆட்சிக்கும் அதன் பிராந்திய பிரதிநிதிகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தும். ஈரானின் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை குறிவைப்பதாக இந்த தாக்குதல் இருக்கும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை இது ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT