வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, சட்டவிரோதமாக நுழைந்தோருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு சட்டப்பூர்வமாக விசா எடுத்து வருவோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் உட்பட ஒரு லட்சம் பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள்.
தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தாக்குதல், திருட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக இதுபோல விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக 30% விசாக்கள், திருட்டு, குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக 20% விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 மாணவர்களின் விசாக்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாக்களுடன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள், நாட்டில் தங்கியிருக்கும்போது, தேவையான அனைத்து சட்ட ரீதியான விஷயங்களுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் இதனை கடுமையாக கடைப்பிடித்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே நடவடிக்கை பாய்ந்துள்ளது.