உலகம்

ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்

செய்திப்பிரிவு

துபாய்: முக்​கிய எண்​ணெய் உற்​பத்தி நாடு​களின் கூட்டமைப்​பான ஒபெக் மற்​றும் ஒபெக் பிளஸ் குழுக்களில் இருந்து மே 1-ம் தேதி முதல் வில​கு​வ​தாக அமீரகம் அறி​வித்​துள்​ளது.

ஈரான் மீது அமெரி்க்கா மற்​றும் இஸ்​ரேல் ராணுவம் தாக்குதல் நடத்​தியதால் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு விநி​யோகம் தடைபட்டு அதன் விலை உயர்ந்​துள்​ளது. இந்த சூழ்​நிலை​யில் முக்​கிய எண்​ணெய் உற்​பத்தி நாடு​களின் கூட்​டமைப்​பான ஒபெக் மற்​றும் ஒபெக் பிளஸ் குழுக்​களில் இருந்து மே 1-ம் தேதி முதல் விலகு​வ​தாக ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) அறிவித்துள்ளது.

தனது உற்​பத்​தித் திறனை அதி​கரிக்க சமீபத்​தில் மேற்​கொண்ட முதலீடு​களைத் தொடர்ந்​து, வளர்ந்து வரும் உலகளா​விய எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய இந்த முடிவு உதவும் என்று யுஏஇ தெரி​வித்​துள்​ளது.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் இந்த வெளி​யேற்​றம், ஒபெக் அமைப்பு ‘உலகையே ஏமாற்​றுகிறது' என்று விமர்​சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​புக்கு கிடைத்த வெற்​றி​யாகக் கருதப்​படு​கிறது.

அமெரிக்​கா-இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையே​யான போர் தொடங்​கு​வதற்கு முன்​பு, ஜனவரி மாதத்​தில், சவுதி அரேபியா மற்​றும் பிற ஒபெக் நாடு​களிடம் எண்​ணெய் விலை​யைக் குறைக்​கு​மாறு ட்ரம்ப் கேட்​டுக் கொண்டதுடன், இறக்​குமதி வரி​களைப் பயன்படுத்துவேன் என்​றும் எச்​சரித்​திருந்​தார்.

இதுகுறித்து எம்​எஸ்டி ஃபை​னான்​சி​யல் நிறு​வனத்​தின் எரிசக்தி ஆராய்ச்​சிப் பிரி​வின் தலை​வர் சவுல் கவோனிக் கூறும்​போது, "இது இந்த கூட்​ட​ணி​யின் முடி​வின் ஆரம்​பம்., ஐக்​கிய அரபு அமீரகம் வெளி​யேறு​வ​தால், ஒபெக் தனது உற்​பத்​தித் திறனில் சுமார் 15%-ஐ இழக்​கிறது, மேலும் அதன் மிக​வும் இணக்​க​மான உறுப்​பினர்​களில் ஒரு​வரை இழக்​கிறது" என்​றார்.

சர்​வ​தேச எரிசக்தி முகமை​யின் (IEA) முன்​னாள் அதி​காரி நீல் அட்​கின்​சன் கூறும்​போது, “போர் முடிந்து இயல்​புநிலை திரும்​பும்​போது, விலை​யைத் தீர்மானிக்​கும் ஒபெக் அமைப்​பின் திறன் தெளி​வாக பலவீனமடை​யும்” என்​றார்.

முக்​கிய எண்​ணெய் ஏற்​றுமதி நாடு​களின் நலன்​களைப் பாது​காக்​க​வும், நிலை​யான வரு​வாயை உறுதி செய்​ய​வும் 1960-ம் ஆண்​டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்​றும் வெனிசுலா ஆகிய 5 நாடு​களால் ஒபெக் உருவாக்கப்​பட்​டது.

ஐக்​கிய அரபு அமீரகம் 1967-ல் இணைந்தது. மேலும் சில நாடு​களும் இணைந்​தன. மொத்த உறுப்பு நாடு​களின் எண்​ணிக்கை 12 ஆக இருந்தது. யுஏஇ வெளி​யேறி​னால் உறுப்​பினர்​களின் எண்ணிக்கை 11 ஆக குறை​யும். ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் ரஷ்யா உள்​ளிட்ட மேலும் 10 நாடு​கள் உள்ளன.

SCROLL FOR NEXT