உலகம்

ஐ.நா பொதுச் செயலாளர் எச்சரிக்கை: பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுடன் மோதிய அமெரிக்கா, இஸ்ரேல்!

வெற்றி மயிலோன்

நியூயார்க்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத சங்கிலித்தொடர் நிகழ்வுகளை தூண்டும் அபாயம் இருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்ததால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரானுடன் மோதின.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களில் உலகின் சக்திவாய்ந்த 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடியது.

          

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ், "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை நாம் காண்கிறோம். உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சங்கிலித் தொடர் நிகழ்வுகளை தூண்டும் அபாயத்தை இந்த ராணுவ நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் உலகிற்கும் இப்போது அமைதிக்கான ஒரு வழி தேவை. பதற்றத்தைக் குறைத்து உடனடியாக விரோதங்களை நிறுத்த வேண்டும். இது பொதுமக்களுக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மோதலாகும்" என்று தெரிவித்தார்.

மேலும், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் ஈரானின் தாக்குதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய ராணுவத் தாக்குதல்களை குட்டெரெஸ் கண்டித்தார்.

அவர், "தெஹ்ரானில், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்சத் தலைவரின் வளாகம் உள்ளிட்ட இடங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலிய வட்டாரங்களின்படி, ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி உட்பட பல உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதை நான் உறுதிப்படுத்தும் நிலையில் இல்லை" என்று குட்டெரெஸ் கூறினார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ​​புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ எஸ்டேட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்ரூத் சமூக வலைதளத்தில் கமேனியின் மரணத்தை அறிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் மோதின. அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், "வரலாற்றில் இது தார்மீக தெளிவு தேவைப்படும் ஒரு தருணம். எந்தவொரு இறையாண்மை அரசாங்கத்தின் மிக அடிப்படையான கடமை அதன் மக்களைப் பாதுகாப்பதாகும். அதனால்தான் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

ஈரானுக்கு ராஜதந்திர வாய்ப்புகள் இருந்தபோதிலும் அணு ஆயுத உற்பத்திக்கான நோக்கங்களை கைவிட மறுத்தது ஒரு கடுமையான மற்றும் பெருகிவரும் ஆபத்தை முன்வைக்கிறது. ஈரானில் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. இதற்காக அமெரிக்கா சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐ.நா.வில் தார்மீக தெளிவு இல்லாத இடத்தில், அமெரிக்கா அதை பராமரிக்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன், "ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலை அது மீளமுடியாததாக மாறுவதற்கு முன்பு எதிர்கொண்டு நிறுத்த இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது. இந்த நடவடிக்கை அணுசக்தி உள்கட்டமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள், பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டும் அடக்குமுறை நடவடிக்கைகளை குறிவைத்தது. நாங்கள் தூண்டுதலின் பேரில் செயல்படவில்லை, ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் செயல்படவில்லை. நாங்கள் தேவையின் பேரில் செயல்பட்டோம். அச்சுறுத்தல் இருக்கும் வரை இந்த கூட்டு முயற்சி தொடரும்" என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமெரிக்காவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, "ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ஈரானில் பொதுமக்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்கி வருகின்றன. இது ஆக்கிரமிப்புச் செயல் மட்டுமல்ல, இது ஒரு போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இவர்கள் தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளியின் மீதான தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுள்ளனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு ஆக்கிரமிப்புச் செயலைச் செய்துள்ளன என்பதை பாதுகாப்பு கவுன்சில் உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்கியுள்ளன. அவர்கள் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தையும் மீறிவிட்டனர். அவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு தொடரும் வரை, ஆக்கிரமிப்பு முடியும் வரை, ஈரான் தனது சுய பாதுகாப்பு உரிமையை உறுதியாகவும், தயக்கமின்றியும் தொடர்ந்து பயன்படுத்தும். பாதுகாப்பு கவுன்சில் இப்போதே செயல்பட்டு இந்த ஆக்கிரமிப்புச் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். மவுனம் என்பது இந்தக் குற்றத்தில் உடந்தையாக இருப்பது" என்று ஈரானிய தூதர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஈரான் தூதர் இரவாணி மற்றும் அமெரிக்க பிரதிநிதி வால்ட்ஸ் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ஈரான் தூதர், வால்ட்ஸிடம் கண்ணியமாக இருக்கச் சொன்னார், அதற்கு அமெரிக்க தூதர் "இந்த பிரதிநிதி இந்த அமைப்பில் அமர்ந்திருப்பதால், பல்லாயிரக்கணக்கான தனது சொந்த மக்களைக் கொன்று, உங்கள் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை பெற விரும்பியதற்காக இன்னும் பலரை சிறையில் அடைத்த ஒரு ஆட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், உங்கள் கருத்தை நான் மதிக்கப் போவதில்லை" என்று கூறினார்.

SCROLL FOR NEXT