உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.படம்: பிடிஐ
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 5-வது ஆண்டாக நீடிக்கிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகப் பொது உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றைக் குறி வைத்து இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யத் தலை நகர் மாஸ்கோவைக் குறி வைத்து உக்ரைன் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது. போர் தொடங்கியதற்குப் பிறகு மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும். குறிப்பாக, ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலின் 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், மாஸ்கோவைக் குறி வைத்து உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளது.
மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆலையில் தீப்பற்றி வானுயரத்துக்குப் புகை மண்டலம் எழுந்தது. மாஸ்கோவின் குடியிருப்புப் பகுதிகளையும் உக்ரைன் ட்ரோன்கள் தாக்கின. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் குறித்து மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியேவ் கூறுகையில், ‘‘சோஃபியினோவில் 3 மாடி குடியிருப்புக் கட்டிடம் மீது ட்ரோன் தாக்கியதில் 44 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அதேபோல, ஒரேகோவோ-ஜுவோ மாவட்டத்தில் ஒரு தனியார் வீடு தாக்கப்பட்டதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்’’ என தெரிவித்தார்.
மாஸ்கோ மேயர் செர்ஜிசோபியான் கூறும்போது, ‘‘சனிக்கிழமை முதல் உக்ரைனின் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதன் மூலம் மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதல், தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. எனினும், எதிரியின் நோக்கம் தோல்வியடைந்தது’’ என்றார்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தகர்க்கும் உக்ரைன் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "ரஷ்யாவின் போர் இயந்திரத்தைத் தாங்கிப் பிடிக்கும் பில்லியன் கணக்கிலான டாலர்கள் ஈட்டும் எண்ணெய் மையங்களைக் குறி வைத்துத் தாக்கியுள்ளோம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘பிளமிங்கோ’, ’பெலிகன்’ ரக ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் தளவாடப் போக்குவரத்து மையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், ''இந்தத் தளம் மாஸ்கோ பிராந்தியத்தின் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான எரிபொருளை வழங்குகிறது. மேலும் அதன் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளில் ஒரு பகுதி ரஷ்ய ராணுவத்துக்குச் செல்கிறது. இதுபோன்ற தளங்களைத் தாக்குவது, எதிரிதனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்வதற்கும், அதன் ராணுவப் பிரிவுகளுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கும் உள்ள திறனை நேரடியாகப் பலவீனப்படுத்தும்’’ என்றார்.
உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு: உக்ரைனுக்குப் பதில் அளிக்கும் வகையில், அதன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல சுமி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இரு தாக்குதல்களிலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதை உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த வாரத்தில் மட்டும், ரஷ்யா 2,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும், 1,700 வான்வழி குண்டுகளையும், பல்வேறு வகைகளைச் சேர்ந்த 19 ஏவுகணைகளையும் உக்ரைன் மீது ஏவியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.