உலகம்

லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

டெக்ஸ்டர்

வாஷிங்டன்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள புதிய வான்வழி தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கை மிகவும் நெருங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துத் தரப்பினரும் உடனடியாகத் தங்களின் ராணுவத் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சூழலில், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “லெபனான் உட்பட ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் அமைதியை கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு நாம் மிக அருகில் உள்ளோம்.

எனவே அனைத்துத் தரப்பினரும் பின்வாங்க வேண்டும். இது ஒரு நீண்ட மற்றும் அழகான அமைதிக்கான தொடக்கமாக அமையலாம், அதனை நாம் கெடுத்துவிடக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேல் லெபனானில் எங்கும் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அதே நேரத்தில் ஹிஸ்புல்லா உட்பட எந்தவொரு அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்த கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த ஒப்பந்தம், அதிபர் ட்ரம்பின் பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை அன்றே கையெழுத்தாகும் என்று அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் கணித்திருந்தனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதற்கான மின்னணு கையெழுத்து நடைமுறைகளுக்குத் தயாராகி வருவதாக குறிப்பிட்டிருந்தார். 

எனினும், ஈரான் இந்த ஒப்பந்ததுக்கான காலக்கெடு குறித்து சற்றே தயக்கம் காட்டியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி பேசுகையில், ஒப்பந்தம் உடனடியாக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும், வரும் நாட்களில் அது நிகழலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT