அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த குடியரசுக் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாம் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’யை (பேரழிவு சீற்றம்) அரங்கேற்றலாம் அல்லது அவர்கள் உடன்பாட்டுக்கு ஒப்புக்கொள்வார்கள். ஏற்கெனவே ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் அணு ஆயுத செறிவூட்டும் திறனை நாம் முற்றிலுமாக அழித்தோம்.
ராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நாம் அவர்களை தோற்கடித்தோம். ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ, போர் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
இந்த வார இறுதியிலேயே ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று துருக்கிக்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக் கூறிய சில மணி நேரத்தில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் மீண்டும் தாக்கினால், விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈரான் தாக்கப்பட்டால், கடலடி கேபிள்கள் முதல் ராணுவத் தளங்கள் வரை முற்றிலுமாக அழிக்கப்படும். இனி இருக்காது. அமெரிக்கா நெருப்புடன் விளையாடக்கூடாது” என தெரிவித்தார்.