வாஷிங்டன் டி.சி.: ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்ட 100% வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளுக்கும் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது.
இதற்காக, கிரஹாம் சட்டம் எனும் ஒரு சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் கடந்த செப்.16-ம் தேதி நிறைவேற்றியது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% வரியை விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இச்சட்டத்தின் பிரிவு 115 அளிக்கும் இந்த அதிகாரத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 100% வரியை விதித்தது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது என அமெரிக்காவே முடிவெடுத்துள்ளதால், மற்ற நாடுகளுக்கு விதித்த வரியையும் ரத்து செய்ய அந்நாடு முடிவெடுத்தது.
இதையடுத்து, அதே கிரஹாம் சட்டத்தின் பிரிவு 115(ஏ) வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடுகள் மீதான 100% வரியை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிரஹாம் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை நான் நீக்குகிறேன். தற்போதைய சூழலில் இத்தகைய விலக்கை வழங்குவது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு ஏற்றது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.